“பெரிய ஹீரோ இல்லாத படங்களுக்கு ஊடகங்கள் தான் ஹீரோ!”

என்.டி.சி மீடியா, வீகேர் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்த (மார்ச்) மாதம் 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

படக்குழுவினர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் வெற்றி பேசும்போது,  “நான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. இதற்கு முன் ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தேன். ஸ்ட்ராபெர்ரி படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். கூத்துப்பட்டறை முத்துசாமி சார் தான் என்னை பட்டை தீட்டிய குரு.

இது மண் மணம் மாறாத கிராமத்துக் காதல் கதை. இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டியது எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த படத்தின் கேப்சன் ‘ஏ ஜர்னி ஆஃப் ஹோப்’ என்றிருக்கும். அதாவது ‘நம்பிக்கையின் ஒரு  பயணம்’ என்றிருக்கும். படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுபோல படத்திற்கும் பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

படத்தின் நாயகி அதிதி கிருஷ்ணா பேசும்போது, “வில்லேஜ் பேக்ட்ராப்ல எல்லா எமோஷன்களும் கலந்திருக்கும் பேமிலி எண்டர்டெயினர் படம் தான் இது. எனக்கு இது முதல் தமிழ் படம். இயக்குநர் பாலமுருகன் ஒவ்வொரு காட்சியையும் விளக்கி, என்னை நடிக்க வைத்தார்.”என்றார்.

படத்தின் மற்றொரு நாயகனான சௌந்தரராஜா பேசும்போது, “சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தின் கேரக்டர் குறித்து இயக்குநர் பாலமுருகன் என்னிடம் தெரிவித்தார். இப்படத்தில் நாயகிக்கு அண்ணன் கேரக்டரில் நடிக்கிறேன். கோபக்காரனாகவும், பாசக்காரனாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான், தயாரிப்பாளர் எனக்கு பேசிய சம்பளத்தை முழுதாக கொடுத்து என்னை அசத்தினார். 24 ஆம் தேதியன்று நான் நடித்த மற்றொரு படமும் வெளியாகிறது. அதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறேன்” என்றார்.

0a

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசும்போது,”இந்த படத்தின் இயக்குநர் இசைஞானம் மிக்கவர். அவருடன் பணியாற்றுவது சவாலாக இருந்தது. அத்துடன் அவர் இப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் எமோஷனல் காட்சிகளுக்கான பின்னணியிசை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மாசிடோனியோ மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களுக்கு சென்று பதிவு செய்திருக்கிறோம். இதற்காக தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”என்றார்.

தயாரிப்பாளர் சி.எம். வர்கீஸ் பேசும்போது, “கிராமத்து பின்னணியிலான கமர்சியல் படங்கள் வெளியாகி நிறைய நாளாகிவிட்டது. அதனால் பாலமுருகன் இந்தக் கதையைச் சொன்னவுடன் தயாரிக்க முன்வந்தேன். இது ஒரு பேமிலி எண்டர்டெயினர் படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.”என்றார்.

படத்தினை வெளியிடும் விநியோகஸ்தர் வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெங்கடேஷ் பேசும்போது, “தங்கரதம் படத்திற்காக நாங்கள் புதிய முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் லேட்டஸ்ட்டாக டிக்கெட் மார்க்கெட்டிங் என்ற முறை அறிமுகமாகியிருக்கிறது. இதை நாங்களும் செயல்படுத்த எண்ணியிருக்கிறோம். இந்த படத்திற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்ட களப்பணிகளை தொடங்கியிருக்கிறோம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த திட்டம் வெற்றி பெற்றால் அனைத்து சிறிய படங்களுக்கும் பெரிய ஊக்கத்தை கொடுக்கும். ஒரு சின்ன பட்ஜெட் படத்தை இரண்டு லட்சம் பேர் பார்த்தால் போதும். போதிய வசூலைப் பெற முடியும். திரையுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்.”என்றார்.

இயக்குநர் பாலமுருகன் பேசும்போது, ‘”இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் சௌந்தரராஜா, வில்லன் கிடையாது. அவரும் ஒரு லீட் ரோலில் தான் நடித்திருக்கிறார். வெற்றியும் ஒரு லீட் ரோலில் தான் நடித்திருக்கிறார்.  தமிழ்நாட்டின் பெரிய காய்கறி மார்க்கெட்டாக இருக்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எங்களுக்கு கமிஷன் கடை இருக்கிறது. அங்கு பெற்ற அனுபவத்தை வைத்து இந்த கதையை உருவாக்கினேன். இந்த படத்தில் வெள்ளபுறா என்ற கேரக்டரில் பாண்டியன் என்பவரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவர் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றால் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். ஒரு படத்தில் பெரிய ஹீரோக்கள் நடித்தால், அவர்களே ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஆனால் பெரிய ஹீரோக்களாக இல்லாதவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஊடகங்கள் தான் ஹீரோ. ஊடகங்கள் அடையாளம் காட்டும் படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அதனால் தங்கரதம் போன்ற சிறிய படங்களை அடையாளங்காட்டி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் பினுராம் மற்றும் ஹரி, ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ், கலை இயக்குநர் என்.கே.பாலமுருகன், பாடகர் அந்தோணி தாசன், பாடகி தேவிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.