மோடி அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்!

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள், விவசாய வங்கி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 28ஆம் நாளான இன்று அவர்களில் 8 பேரை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாகக் கூறி மந்திர் மார்க் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதற்காக அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் இருந்து எட்டு பேரும் மோடியிடம் அளிக்க வேண்டிய மனுவுடன் ஆவலாகச் சென்றனர். அங்கு மோடியின் அலுவலகத்தில் அவர்களிடம் இருந்து மனு பெறப்பட்டது. மோடி நாடாளுமன்ற கூட்டத்திற்கு சென்றிருப்பதாக காரணம் கூறப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகளை மீண்டும் போலீஸார் வேனில் ஏற்றி ஜந்தர் மந்தருக்கு கொண்டு சென்றனர். மோடியின் அலுவலகம் அமைந்துள்ள ராஜ்பாத் சாலையில் இருந்து வேன் புறப்பட்டபோது, திடீர் என அதிலிருந்து மூன்று விவசாயிகள் கீழே இறங்கினர். பிறகு தங்களுடைய ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்று, ‘தேஷ்கா கிசான்கோ பச்சாவ் (நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்)’ என ஆவேசமாக இந்தியில் கோஷமிடத் துவங்கினர்.

பிறகு ராஜ்பாத் சாலையின் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக உருளத் துவங்கினர். இதனால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை விவசாயிகளிடம் சற்றும் எதிர்பாராத போலீஸார், சில நிமிடங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அய்யாகண்ணு கூறுகையில், ‘பிரதமரை சந்திக்க வைப்பதாகக் கூறி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர். எங்களை சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார். நாங்கள் இந்த நாட்டின் அடிமைகளாகி விட்டோம். இதுதான் எங்கள் பரிதாப நிலை. இந்த நாட்டின் விவசாயிகள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆகி விட்டனர்.’ எனத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம் உட்பட மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களை கொண்ட நார்த் பிளாக், சவுத் பிளாக் மற்றும் குடியரசு தலைவர் மாளிகையும் அங்கு அமைந்துள்ளது. இதை வெளியில் இருந்து அன்றாடம் காண வரும் சுற்றுலாவாசிகள், பொதுமக்கள் மற்றும் மத்தியர அரசின் அலுவலர்களும் இதைக் கண்டு திகைத்து நின்றனர். சில நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் விவசாயிகளை சமாதானப்படுத்திய போலீஸார் அவர்கள் ஆடைகளை அணிய வைத்து மீண்டும் ஜந்தர் மந்தர் கொண்டு வந்து விட்டுள்ளனர். இவர்களில், நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 13 முதல் துவங்கி நடைபெற்று வரும் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, வங்கிகடன் ரத்து, நதிகள் இணைப்பு, வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் எனப் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழகம் மற்றும் தேசிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தமிழக விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து மோடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை உயரதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.