‘துக்ளக்’ விழாவில் பொய் பேசிய ரஜினி: உண்மையில் பெரியார் பேரணியில் நடந்தது என்ன?

வாரம் சுமார் 5ஆயிரம் பிரதிகள் கூட விற்பனையாகாத ’துக்ளக்’ என்ற டம்மி இதழின் 50ஆம் ஆண்டு (!) விழா ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. “யாரும் கருப்பு உடை அணிந்து வரக் கூடாது” என்று பார்ப்பனியம் பீதியுடன் முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்த அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

“1971-ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். ‘பிளாக்’கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய ‘பப்ளிசிடி மேனேஜர்’ என சோ அட்டையிலேயே வெளியிட்டார்” என்று குறிப்பிட்டார்.

அந்த ஊர்வலத்தில் உண்மையில் நடந்தது என்ன?

பெரியார் தலைமையில் இயங்கிய திராவிடர் கழகம் ’மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை 1971ஆம் ஆண்டு ஜனவரி 23- 24ஆம் தேதிகளில் சேலம் போஸ் மைதானத்தில் நடத்தியது. தொழிலதிபர் ஜி.டி.நாயுடு அந்த மாநாட்டைத் திறந்து வைத்தார்.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 24ஆம் தேதியன்று மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. ராஜேந்திரா சத்திரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் மூடநம்பிக்கையை விளக்கும் வகையிலான காட்சிகளைக் கொண்ட ட்ரெக்குகளும் இடம் பெற்றன. இந்துக் கடவுள்களின் படங்களைக் கொண்ட டிரெக்குகளும் இதில் வந்தன. இந்த ஊர்வலம் குறித்துதான் ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவரும் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான கலி. பூங்குன்றனிடம் கேட்டபோது, “இந்த ஊர்வலத்தில் பெரியாரும் ஒரு ட்ரெக்கில் வந்துகொண்டிருந்தார். அவருக்குக் கறுப்புக் கொடிகாட்ட ஜனசங்கத்தினர் அனுமதி பெற்றிருந்தனர். கறுப்புக் கொடி காட்டும்போது, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் பெரியாரை நோக்கி செருப்பை வீசினார். ஆனால், பெரியாரின் வாகனம் கடந்து சென்றுவிட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத் தொண்டர்கள், அதே செருப்பை எடுத்து ஊர்வலத்தில் வந்த ட்ரெக்கில் இருந்த ராமர் படத்தை அடித்தனர். இதுதான் நடந்தது,” என்றார் அவர்.

ராமர், சீதை படங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகவும் ரஜினி சொல்வது உண்மையா எனக் கேட்டபோது, “அது பச்சைப் பொய். அப்படி ஆடையில்லாமல் உருவங்கள் கொண்டுவரப்படவில்லை. ராமர் படத்திற்கு மட்டுமல்ல, எந்தப் படத்திற்கும் செருப்பு மாலை போடப்பட்டிருக்கவில்லை” என்கிறார் கலி. பூங்குன்றன்.

இது தொடர்பாக எந்த செய்தித்தாளும் செய்தி வெளியிடவில்லை என்றும் துக்ளக் மட்டுமே செய்தி வெளியிட்டதாகவும் ரஜினிகாந்த் அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டார். ஆனால், தினமணி நாளிதழ் இந்த நிகழ்வு தொடர்பாக விரிவான செய்திகளை வெளியிட்டுவந்தது.

2017ல் இந்த நிகழ்வை ஒட்டி நடந்த சம்பவங்களைத் தொகுத்து, “தடைசெய்யப்பட்ட துக்ளக்” என்ற புத்தகம் வெளியானது. அதிலும்கூட, ராமர் படம் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகவோ, செருப்பு மாலை போடப்பட்டிருந்ததாகவோ குறிப்புகள் இல்லை.

ஆனால், சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருந்த நிலையில், ரஜினி குறிப்பிட்டதைப் போல தி.மு.கவிற்கு இந்த விவகாரம் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. “ராமனை செருப்பால் அடித்த தி.மு.கவுக்கா உங்கள் ஓட்டு என எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்தார்கள். ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடிப்பது போலவும் அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் கருணாநிதி “சபாஷ் சபாஷ்” என்று கூறுவதைப் போலவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன” என்கிறார் கலி. பூங்குன்றன்.

இந்த சம்பவத்தை விமர்சித்து அட்டைப்பட கார்ட்டூன் வெளியிட்ட துக்ளக் இதழ் பிப்ரவரி 14ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டதாக ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூல் கூறுகிறது.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது முந்தைய தேர்தலில் 138 இடங்களையே பிடித்திருந்த தி.மு.க. அந்தத் தேர்தலில் 183 இடங்களைப் பிடித்திருந்தது