“ஆளுநரே வெளியேறு” என திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம்: ஆளுநர் ர.நா.ரவி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை 10 மணிக்கு ஆளுநர் ர.நா.ரவி உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தின் ‘சம்பவங்கள்’…

 • சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக ஆளுநர் ர.நா.ரவி, தலைமை செயலகத்துக்கு 9.50 மணிக்கு வந்தார்.
 • ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
 • இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
 • சரியாக காலை 10 மணிக்கு பேரவையில் ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.
 • ஓபிஎஸ் ,இபிஎஸ் இருவருக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
 • உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரிசையில் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்ததாக 10-வது இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
 • உரையை ஆளுநர் வாசிக்கத் தொடங்கியதும் திமுக கூட்டணிக் கட்சிகள் “ஆளுநரே வெளியேறு” என்று கோஷங்களை எழுப்பினர்.
 • இதற்கிடையில் ‘தமிழக சகோதர – சகோதரிகளுக்கு வணக்கம்’ என்று கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உரையை தொடங்கினார் ஆளுநர்.
 • வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்று கூறி 10.50 மணிக்கு ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.
 • உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
 • அப்பாவு வாசித்துக்கொண்டு இருக்கும்போது, அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்.
 • சமூக நீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் வாசிக்க மறுத்துள்ளார்.
 • அப்பாவு பேசி முடித்ததும் முதல்வர் எழுந்து அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று தெரிவித்தார்.
 • ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்னும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
 • இந்த தீர்மானத்தை வாசிக்க தொடங்கியதும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
 • முதல்வர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டு இருக்கும்போதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
 • ஆளுநர் வெளியேறியதும் முதல்வரின் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
 • பேரவை நிகழ்வுகள் முடிந்து தேசியக் கீதம் பாடப்படும்போது ஆளுநர் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • பின்பு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு அவையில் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்தார்.
 • “ஆளுநர் இப்படி பல பிரச்சினைகளை உருவாக்கி வருவது எனக்கு உண்மையிலேயே வேதனையளிக்கிறது” என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

Read previous post:
0a1c
‘லாக்’ படவிழாவில் கம்யூனிஸ்ட் தலைவர் இரா.முத்தரசன் சொன்ன குட்டிக்கதை!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே

Close