எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று வெடித்த சர்ச்சையால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஒற்றை தலைமை, அது எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமை என்போர் ஓரணியாகவும், இரட்டைத் தலைமை, அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் கூட்டுத் தலைமை என்போர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) தலைமையிலும் செயல்படுகின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்துவரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பளித்தது. இதன்படி, அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.