ஓம் வெள்ளிமலை – விமர்சனம்

நடிப்பு: சூப்பர்குட் சுப்பிரமணி, வீரசுபாஷ், அஞ்சு கிருஷ்ணா, கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிசாமி மற்றும் பலர்

இயக்கம்: ஓம் விஜய்

ஒளிப்பதிவு: மணிபெருமாள்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

தயாரிப்பு: ’சூப்பர்ப் கிரியேசன்ஸ்’ ராஜகோபால் இளங்கோவன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

நமது பாரம்பரிய மருத்துவமான நாட்டு மருத்துவத்தை பல நூறு ஆண்டுகளுக்குமுன் சித்தர்கள் அருளியதாக நம்பப்படுவதால், இது ’சித்த மருத்துவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ’இங்கிலீஷ் மருத்துவம்’ எனப்படும் ‘அலோபதி மருத்துவம்’ அங்கிங்கெனாதபடி எங்கும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தின் பெருமைகளைச் சொல்லும் விதமாய் தயாராகி வெளிவந்துள்ளது ‘ஓம் வெள்ளிமலை’ திரைப்படம்.

கீழ்வெள்ளிமலை என்ற மலைகிராமத்தில், நாட்டு மருத்துவப் பரம்பரையில் வந்த வைத்தியர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் அவர் இல்லாத நேரத்தில் அவரது இரண்டாவது மகன் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க, அந்த நோயாளி இறந்துபோகிறார். அவரது இறப்புக்கு நாட்டு மருத்துவம் தான் காரணம் என்று நம்பும் கிராம மக்கள், நாட்டு மருத்துவமே தவறு என்று முடிவு செய்து, நாட்டு வைத்தியரின் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைக்கிறார்கள். வைத்தியரின் மூத்த மகன் அகஸ்தியன் (சூப்பர்குட் சுப்பிரமணி) நாட்டு மருத்துவத்தில் நல்ல ஞானம் பெற்றவராக இருந்தபோதிலும், ஊர்மக்கள் யாரும் அவரிடம் சிகிச்சை பெற முன்வருவதில்லை. மேலும், அவர் வழங்கும் மருத்துவ அறிவுரைகளை நக்கலடித்து உதாசீனம் செய்கிறார்கள்.

இந்நிலையில், உடலெங்கும் அரிப்பாய் அரிக்கும் பயங்கர தோல் அரிப்பு நோய் ஒன்று கீழ்வெள்ளிமலை கிராமத்துக்குள் நுழைந்து அனைவருக்கும் பரவுகிறது. ஒவ்வொருவரும் முகம், கழுத்து, கை, கால் என உடம்பு முழுவதும் விடாமல் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். அரிப்பு தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக்கூட போகிறார்கள்.

இவ்விதம் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியர் அகஸ்தியனிடம் சிகிச்சை பெறுகிறார். குணமடைந்துவிடுகிறார். இதனால் கிராம மக்கள் அனைவரும் தங்களையும் காப்பாற்றுமாறு வைத்தியர் அகஸ்தியனிடம் வேண்டுகிறார்கள். அவரோ, தன் கைவசம் இருந்த அந்த மருந்து தீர்ந்துவிட்டது என்று சொல்வதோடு, அந்த மருந்து தயாரிப்பதற்கான மூலிகையைத் தேடி, கிராமத்தினர் சிலருடன் புறப்பட்டு, மலை மேல் இருக்கும் மேல்வெள்ளிமலை என்ற கிராமத்துக்குச் செல்கிறார். அந்த கிராமத்து மக்களும் இதே அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வைத்தியர் அகஸ்தியன் மலை உச்சிக்குச் சென்றவுடன், அரிப்பு நோயை குணப்படுத்துவதற்கான மருந்து தயாரிக்கும் மூலிகை எது என்பது தனக்கு தெரியாது என்றும், நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணப்படுத்தியது தான் இல்லை என்றும் சொல்லி மக்களை அதிர்ச்சியடையச் செய்கிறார்.

அவர் ஏன் அப்படி சொன்னார்?, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆனது? அவர்களை காப்பாற்றினாரா, இல்லையா? என்பது ‘ஓம் வெள்ளிமலை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இப்படக்கதையின் முதன்மை கதாபாத்திரமான வைத்தியர் அகஸ்தியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணி, ஏற்கெனவே ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள போதிலும், படம் முழுக்க நடிப்பதற்கான வாய்ப்பு இந்த படத்தில் தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த நல்வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ள சூப்பர்குட் சுப்பிரமணி, தனது இயல்பான நடிப்பின் மூலம் சித்த மருத்துவர் கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளார். கிண்டல், கேலி, சோகம், எமோஷன் என பலவித உணர்ச்சிகளை பக்குவமாக வெளிப்படுத்தி சபாஷ் பெறுகிறார்.

இளம் ஹீரோ கதாபாத்திரத்தில் வரும் அறிமுக நடிகர் வீரசுபாஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.

வைத்தியர் அகஸ்தியனின் மகளாக – இளம் ஹீரோயினாக – நடித்திருக்கும் அறிமுக நடிகை அஞ்சு கிருஷ்ணா, வசன உச்சரிப்பு, நடிப்பு, உடல் மொழி, தோற்றம் என்று அனைத்திலும் அச்சு அசலான மலை கிராமப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். சரியான கதைகளையும், கதாபாத்திரங்களையும், இயக்குனர்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் திரையுலகில் நல்ல இடத்தைப் பிடிப்பார்.

கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ் பாண்டியன், கவிராஜ், பழனிச்சாமி உள்ளிட்டோர் மண்ணின் மைந்தர்களாக அளவாக நடித்திருக்கிறார்கள்.

நமது பாரம்பரிய சித்த மருத்துவம் பற்றியும், சித்தர்கள் பற்றியும் சொன்னதற்காக இயக்குனர் ஓம் விஜய்யை பாராட்டலாம்.  தான் சொல்ல வந்த விஷயத்தை போரடிக்காமல் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத திருப்பங்களுடனும், வியாபார சமரசம் இல்லாமல் திறமையாக சொல்லியிருக்கும் இயக்குனர், திரைக்கதையை அளவுக்கதிகமாய் மதச்சாயத்துக்குள் மூழ்கடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். சித்த மருத்துவம் மதச்சார்பற்ற தன்மையைப் பெற்றால் மட்டுமே அது எதிர்காலத்தில் செழித்து வளர இயலும் என்பதை இப்படத்தின் இயக்குனர் போன்ற சித்த மருத்துவ ஆதரவாளர்கள் என்றைக்குத் தான் புரிந்துகொள்வார்களோ…!

ஒளிப்பதிவாளர் மணிபெருமாள் காடுகளையும்,  மலைகளையும், அவற்றினூடே இருக்கும் பழமை மாறாத கிராமத்தையும், கிராம மக்களையும் யதார்த்தமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

‘ஓம் வெள்ளிமலை’ – பார்க்கலாம்!