சுப. உதயகுமாரும், அயோக்கியன் அர்னாப் கோஸ்வாமியும்!
ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கும், அதன் தலைவர் திரு அர்நாபுக்கும் எனது வாழ்த்துக்கள்.
தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை அறிக்கைகளை வெளிக்கொண்டு வர, உயிரைப் பணயம் வைத்து உழைத்த செய்தியாளர்களைப் பார்த்திருக்கிறேன். சாதியக் கொடுமைகளை வெளிச்சம் போடுவதற்காக களத்திற்குச் சென்று உதைபட்டு, அஞ்சாமல் செய்திகளை வெளியிட்டவர்களை அறிந்திருக்கிறேன்.
அதிகார பீடங்களின் ஊழல் முறைகேடுகளை, மறைக்கப்பட்ட கோப்புகளைத் தேடியெடுத்து அம்பலப்படுத்திய செய்திகள் வந்திருக்கின்றன.
முதல்முறையாக, எல்லோருக்கும் நீங்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். தமிழக மக்களிடம் மறைக்கப்பட்ட ஆயிரம் உண்மைகள் இருந்தாலும், தமிழக மக்களின் செல்வ வளங்களைக் களவாடி, உரிமைகளை காவு கொடுக்கும் ஏராளமான ‘திரைமறைவுப் பேரங்கள்’ நடந்து வருகின்றபோதிலும் – அவற்றையெல்லாம் விட மிக முக்கியமான செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கொடுக்கிறீர்கள்.
சுப. உதயகுமாரன், நிதி பெறுவதற்காக எந்த வங்கிக் கணக்கில் நிதி செலுத்த வேண்டும் என்று பேசும் செய்திதான் இன்றைக்கு தலைப்புச் செய்தி. உடனே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தோன்றி, இவ்விசயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் வேறொரு தலைப்புச் செய்தியை அர்நாப் உருவாக்கினார். காஷ்மீரில் ஒருவர் இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை வாழ்த்திவிட்டு, பங்களாதேசுக்கு எதிரான இந்திய வெற்றியை வாழ்த்தி டுவிட்டரில் பதிவு போடவில்லை என்ற மிக முக்கியமான பிரச்சனை அது.
இதற்கு முன் எந்தத் தொலைக்காட்சியாவது டுவிட்டர் பதிவுகளுக்காக உங்களை பாகிஸ்தான் போகச் சொல்லி அறிவுறுத்தியதுண்டா? அர்நாப் செய்துகாட்டினார். ஒரு சங்கி தன்னை உலக மேதாவியாகக் காட்டிக்கொள்ளவும் முடியும் என நிரூபித்தார்.
பாகிஸ்தானின் கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து ஏதேனும் பதிவு செய்துவிட்டால், அதிலும் குறிப்பாக காஷ்மீரிகள் பதிவிட்டால் அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும். அர்நாப் மீண்டும் மீண்டும் ப்ரைம் டைமில் பேசிக் கொண்டிருந்தபோது, ராஜஸ்தானில் ஒரு பெண்ணைப் பாதுகாத்த 52 வயது முதியவரை நகராட்சி அதிகாரிகள் அடித்ததில், அவர் மரணமடைந்தார்.
ஹரியானாவில் தலித் மக்கள் தங்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர போராட்டத்திற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். கூர்க்காலாந்து போராட்டத்தில் காவல்துறையினர் சுட்டதில் போராடிய மக்கள் கொல்லப்பட்டதான செய்தி வந்தது.
மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலும் கூட, திருவாளர் அர்நாபின் தொலைக்காட்சி குண்டுகளைக் குற்றம் சொன்னதேயன்றி ஒரு நாளும் ஆட்சியாளர்களைக் கடித்துக் குதறியதில்லை.
எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு என்ற செய்தியை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதையும் கூட அர்நாபின் ரிபப்ளிக் செய்ததில்லை. ஜனாதிபதி தேர்தல் நேரத்தில், எம்.எல்.ஏக்களின் நேர்மையைக் கேள்வி கேட்பதா? அதிமுக எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்கும்போது ‘என்ன விலை?’ என்ற கேள்வி எழும் அல்லவா.
நாட்டில் எத்தனை மக்கள் பிரச்சனைகள் இருந்தாலும், பரபரப்புச் செய்திகளை உருவாக்குவது எப்படி என்று கற்றுத் தேர்ந்துள்ள அர்நாபை நாம் வாழ்த்தாமல் என்ன செய்வது?
அர்நாபின் நிகழ்ச்சியில், சாவர்க்கரின் தேச துரோகம் பற்றி தோழர் எம்.பி.ராஜேஷ் பேசியதையும், அதைக் கேட்ட அர்நாபின் முகபாவங்களையும் நினைத்துச் சிரிக்கிறேன்.
திரு. அர்நாப், நீங்கள் பாராட்டுக்குரியவர். ஊடகங்களின் நாடகத்தனத்தை தொடர்ந்து அப்பட்டமாக்கி, மக்கள் விரோதத்தனத்தையே சுவாரசியமான வியாபாரமாக எப்படி மாற்றுவதென்று காட்டியிருக்கிறீர்கள்.
ஆட்சியாளர்களுக்கு இதைவிடவும் சிறப்பான சேவையை ஒருவன் ஆற்ற முடியாது என்று காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். யோக்கியமற்றவன் என்ற சொல்லுக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். தொடர்க உங்கள் பணிகள்.
SINDHAN R