நியூட்ரினோ திட்டத்தை ஆதரிக்கும் பத்ரி சேஷாத்ரிக்கு சில கேள்விகள்!

சில தினங்களுக்கு முன்னர் தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் திட்டங்களும் எதிர்ப்புகளும்” என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பாஜாக.வை  சேர்ந்த ராகவன், கிழக்கு பதிப்பகம் பத்ரி, பூவுலகின் நண்பர்களை சேர்ந்த வழ. வெற்றிச்செல்வன் மற்றும் அ.தி.மு.க. கட்சியில் இருந்து கலைராஜன் என பங்கேற்றார்கள்.

அந்த விவாதத்தில்  நியூட்ரினோ திட்டம் குறித்த விவாதம் வந்தபோது, பத்ரி அவர்கள் “பொய்யான பிரச்சாரம் செய்வதில் இந்த தொண்டு நிறுவனங்கள் முழுமூச்சாக ஈடுபடுகின்றன” என்றும், “பொய்யான புரளிகளை பரப்புவதை தான் வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருக்கின்றன” என்றும் வாதம் வைத்தார்.

பூவுலகின் நண்பர்கள் ஒரு தொண்டு நிறுவனம் இல்லை என்றாலும், அவர் சொன்ன “நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு பிரச்சாரத்தில்” நாங்களும் ஈடுபட்டு இருப்பதால் சில கேள்விகளை அவர் முன் வைக்க விரும்புகிறோம்.

  1. நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கின்ற பகுதி ஒரு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இல்லையா? அந்த திட்டத்திற்காக பல லட்சக்கணக்கான டன் பாறைகளை பல லட்சம் கிலோ வெடிமருந்துகளை பயன்படுத்தி தகர்க்கப் போவதில்லையா?
  2. அவ்வாறு பாறைகளை தகர்க்கும்போது சுற்றியுள்ள பகுதிகளில் எந்த விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை சலீம் அலி நிறுவனம் ஆராயவில்லை என்பது புரளியா?
  3. சூழல் தாக்கீது அறிக்கையை தயார் செய்த சலீம் அலி நிறுவனம், இதைப் போன்ற ஆய்வுகளை செய்வதற்கு தகுதியற்ற நிறுவனம் என்பதை மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது என்பது கட்டுக்கதையா?
  4. இந்த திட்டத்திற்கான அனுமதியை “சாதாரண கட்டிடம் கட்டுவது போல் அனுமதி வாங்கி இருக்கிறார்களே, இது போலியா அல்லது உண்மையா?. திட்டத்திற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்த நிறுவனம் (இந்திய கணித அறிவியல் நிறுவனம்) வேறு, இந்த திட்டத்தின் project proponent (டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மய்யம்) வேறு என்று ஏன் இருக்க வேண்டும்? நாளை ஏதேனும் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்ள வசதியாக இருக்கும் என்பதாலா?
  5. இந்த திட்டம் அமைய இருக்கின்ற பகுதியின் அருகில் மதிகெட்டான் சோலை உட்பட சில தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் இருந்தும் வனத்துறையிடம் அனுமதி வாங்கத் தேவை இல்லை என்று சொல்லுவது உண்மை இல்லையா?
  6. அம்பரப்பர் மலையில் இருந்து 50கி.மீ. சுற்றளவுக்குள் 12 நீர் தேக்கங்கள், அதுவும் குறிப்பாக “முல்லை பெரியார்” உள்ளது உண்மை இல்லையா? இந்த திட்டம் ஒரு நீர் மின்திட்டம் (hydo power plant) எவ்வாறு அமைக்கப்படுமோ அவ்வாறு அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், சுரங்கங்கள் போடுவதற்காக வெடிவைத்து தகர்க்கும்போது இந்த நீர்தேக்கங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்லுவது பொய்யா?
  7. இந்த திட்டம், “நியூட்ரினோ ஆயுதங்கள்” எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆராய்ச்சி என்பதை மறுக்க முடியுமா? (அப்துல் கலாம் அவர்களின் கட்டுரையிலும், தமிழ் ஹிந்து கட்டுரையிலும் தெளிவாக சொல்லி உள்ளார்கள்)
  8. இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் அமெரிக்காவின் பெர்மி லேப் உட்பட பல்வேறு சோதனைச்சாலைகளில் இருந்து வெளிவரும் “உற்பத்தி செய்யப்பட்ட” நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போவதில்லையா?
  9. வெடிவைத்து தகர்க்கும்போது அதன் வெடிமருந்து leeching process மூலமாக, நிலத்தடி நீர்மூலமாக அருகில் உள்ள கிணறுகளுக்குச் செல்ல வாய்ப்பு இல்லையா? (இதற்கு ஒரு அறிவியல் ஆய்வு கட்டுரையை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்)

மேலே சொன்னவற்றில் எது புரளி என்று சொன்னால் நன்றாக இருக்கும். நாங்களும் விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

SUNDAR RAJAN

 

Read previous post:
0
“மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம்!” – அரவிந்த் கேஜ்ரிவால்

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.

Close