காவிரி உற்பத்தியாகும் குடகை தமிழகத்துடன் இணைக்க பெரியார் ஒருவர் தான் குரல் கொடுத்தார்!

பத்திரிகைத் தொடர் ஒன்றுக்காக ஒரு முறை குடகு பகுதியில் மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைக் கிராமங்களில் பயணம் செய்தேன்.

அங்குள்ள தலைக்காவிரி பகுதியில்தான் பொன்னி உற்பத்தியாகிறது.

குடகு மக்கள் இன்னமும் தங்களைத் தமிழர்களோடு அடையாளப்படுத்திக் கொள்வதில் விருப்பம் காட்டியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

முன்னொரு காலத்தில் குடகுமலை சோழர்கள் காடு என்றழைக்கப்பட்டது. அவர்கள் அங்கு வாழ்ந்தற்கான வரலாற்று உண்மைகள் செறிந்து உள்ளன.

1956ல் மொழிவாரி மாநிலப் பிரிப்பிற்கு முன் குடகு மதராஸ் ராஜதானியோடு இருந்தது. அங்கு பேசப்படுகிற துளு தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிதான்.

குடகு மக்களின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான பெல்லியப்பா (அந்தப் பெயரில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் கூட தமிழகத்தில் இருந்தார்) காங்கிரஸ்காரர். காந்திஜியைக் குடகு மலைக்கு அழைத்து வந்தவர். பின்னாட்களில் அவர் தனிக் கட்சி கண்டு சுதந்திரத்திற்குப் பின் குடகு ராஜ்யத்திற்குப் போராடினார்.

காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தில் எந்த “பந்த்” நடத்தினாலும் காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பெரிய அளவுக்கு ஆதரவு தென்படாது.

ஏன் என்றால் நீர்ப்பங்கீடு எப்படி வந்தாலும் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ அவர்களுக்கு எந்த மேம்பாடும் இல்லை.

மொழிவாரி மாநிலப் பிரிப்பில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் துளு மொழி அடிப்படையில் ‘குடகு’ என்கிற தனி மாநிலக் கோரிக்கை நேருஜியிடம் வைக்கப்பட்டது. குறைந்தபட்சம் யூனியன் அந்தஸ்தாவது தரப்படவேண்டுமென்று கேட்டனர்.

ஆனால் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என்று நேருஜி ஆலோசனை கூறினார்.

குடகு மக்கள் தமிழகத்துடன் இணையவே விருப்பப்பட்டனர். ஆனால் அன்று அதை நாம் பெரிதாகக் கருதவில்லை.

தந்தை பெரியார் ஒருவர் தான் குடகைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார்.

இருந்தும் நாம் அலட்சியப்படுத்தி விட்டோம்..

கர்நாடகமும் குடகை முதலில் நிராகரிக்கவே செய்தது. ஆனால் விஸ்வேசுவரய்யா என்ற கர்நாடக பொறியியல் மேதையின் அறிவுரையைக் கேட்டு அது குடகை ஏற்றுக்கொண்டது.

அன்று முதல் இன்று வரை நமது அரசியல்வாதிகள் காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் கோட்டை விட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

மக்கள் கவனத்தைத் திசை திருப்ப உண்ணாவிரதம், கதவடைப்பு என்று இயல்பு வாழ்க்கையை நாசப்படுத்துகிறார்கள்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வந்து கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஆகியும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. கண்ணீரில் காவிரி… வெந்நீரில் தமிழகம்!

என் சிறு வயதில் அன்றைய மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னைக்கு விடுமுறைக் காலம் கழிக்க வருவோம்.

கடற்கரைக்குப் போவதென்றால் கொள்ளை ஆசை. ஆனால் வீட்டில் பெரியவர்கள் “இன்னைக்கு ஞாயிறு. பீச் லீவு. பூட்டுப் போட்டிருப்பார்கள்!” என்று சொல்லித் ஏமாற்றுவார்கள் – தட்டிக்கழிப்பார்கள்.

அது சென்ற ஞாயிறு உண்மையானது. காவிரி போராட்டக்காரர்களுக்குப் பயந்த அரசு ஆயிரக்கணக்கில் போலீசைக் குவித்து பெசன்ட் நகர் பீச்சையும் மெரீனாவையும் “பூட்டிப் போட்டது!”

“மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தான் பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள்!” என்று காவிரிப் பிரச்னையில் மாநில அரசு முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

அது உண்மை என்றால் கடற்கரைகளைத் திறந்து விடுங்கள். மக்களை அறவழியில் போராட்ட அனுமதியுங்கள்.

தமிழகத்தின் சக்தி என்னவென்பதை பாரதம் புரிந்து கொள்ளட்டும்.

‘தராசு’ ஷ்யாம்

ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர்