“பெண்களை மதிக்கவும், மரியாதையுடன் நடத்தவும் என் மகனுக்கு கற்று தருவேன்!” – சினேகா

நடிகை சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:

என்னுடைய  துறையில்  பணியாற்றும்  என்  சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதனை  உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்.

இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,  நம் சமுதாயத்தில்   ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம்  இத்தகைய செயல்களுக்கு  பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ என்று பயந்து தான்.

‘தார்மீக போதனையாளர்கள்’ என்று கூறிக்கொண்டு வலம் வரும் ஒரு சிலர், பெண்கள் இவ்வாறு தான் உடை அணிய வேண்டும், இந்த இடங்களுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என கோட்பாடுகள் விதித்து, அதன்  அடிப்படையில் தான் பெண்களின் குணங்களை யூகிக்கின்றனர். தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை கூட தெரிந்துகொள்ள இயலாத இந்த பச்சிளம் குழந்தைகளிடம், இத்தகைய தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுபவர்களை அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி  3 வயது, 7 வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே  இருக்கப் போகிறோம்? ஒன்றும் தெரியாத இந்த பச்சிளம் குழந்தைகளின் இத்தகைய புகைப்படங்களை பார்க்கும்பொழுது, எனது நெஞ்சம் சுக்கு நூறாக உடைந்துவிடுகிறது. ஒரு தாயாக அந்த குழந்தைகளின் பெற்றோர்களின்  வலி என்ன என்பதனை என்னால் உணர முடிகிறது.

‘மதர் இந்தியா’ என்று பெண்மையை போற்றும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களின் பெயர்களை கொண்ட  நதிகள் ஓடும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண் தெய்வங்களுக்கு சமமாக பெண் தெய்வங்களை வணங்க கூடிய நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னுடைய உயிரில் சரி பாதியை தன்னுடைய துணைவிக்கு கடவுள் கொடுத்த வரலாற்று சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தன் கணவருக்கு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பை எதிர்த்து ஒரு ஊரையே எரித்த பெண்மணியின் வாழ்க்கையை பற்றி நாம் கதைகளில் படித்து இருக்கிறோம். அப்படி பெண்மையை போற்றிய   நாட்டில், இப்போது ஏதோ சரி இல்லாமல் ஆகி விட்டது. பெண்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் யாவும் அழிந்து விட்டது. இது நம் நாட்டிற்கு ஏற்பட்ட மிக பெரிய அவமானம்.

தற்போது அந்த நிலைமையை மாற்ற வேண்டிய நேரமும், கடமையும் நமக்கு இருக்கிறது. இத்தகைய மிருகத்தனமான செய்லகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு தங்களின் மரியாதையை திரும்பப் பெற்றுத் தர நாம் குரல் கொடுக்க வேண்டும். முன்பு போல பெண்கள் பாதுகாப்பாக இருக்க நாம் குரல் கொடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சட்டம் வழங்க வேண்டும் என்பதற்காக நாம்  குரல் கொடுக்க வேண்டும். இனி பெண்  குழந்தைகளை தவறான எண்ணத்தோடு நெருங்கும் ஒவ்வொரு ஆணுக்கும், இந்த தண்டனை அவர்களின் மனதில் பயத்தை விதைக்க வேண்டும். நிர்பயா, நந்தினி, ரித்திகா, ஹாசினி போன்றவர்களுக்கு  ஏற்பட்ட கோர சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது. எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுக்கு  மரியாதை வேண்டும்.

இந்த தருணத்தில் நான் ஒரு சிறிய முயற்சியை எடுக்கிறேன். ஒரு அம்மாவாக, என்னுடைய மகனுக்கு பெண்களை மதிக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் அவனுக்கு சொல்லி தருவேன் என உறுதிமொழி எடுக்கின்றேன்.

கனத்த இதயத்துடன்

சினேகா (ஒரு பெண்)

 

Read previous post:
0a1d
Yaman Movie Sneak Peek – Video 

Yaman is an action thriller film directed by Jeeva Shankar, starring Vijay Antony and Miya George in the lead roles.

Close