சீதக்காதி – விமர்சனம்

இந்த படம் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியப் பெருவள்ளலான சீதக்காதியின் வாழ்க்கைக் கதை அல்ல. மேலும், இப்படத்தில் வரும் எந்த கதாபாத்திரத்தின் பெயரும் சீதக்காதி அல்ல. எனில், இப்படத்துக்கு ஏன் ‘சீதக்காதி’ என்ற தலைப்பு? “செத்தும் கொடுத்தார் அன்றைய பெருவள்ளல் சீதக்காதி. அதுபோல், செத்தும் நடித்து, புகழும் பொருளும் ஈட்டிக் கொடுக்கிறார் நாடகப் பெருங்கலைஞர் அய்யா ஆதிமூலம்” என்பது இப்படத்தின் கதைக்கரு என்பதால், இப்படத்துக்கு இந்த தலைப்பு மிகப் பொருத்தமானதே.

நாடகக் கலையை தன் உயிராக நேசித்தும் சுவாசித்தும் வாழ்பவர் அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி). 75 வயதைக் கடந்த அந்தப் பெரியவர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். ஆனால், அவரும், அவரைச் சார்ந்தவர்களும் நாடகமே தங்கள் ஜீவநாதம் என்று வாழ்கிறார்கள்.

சினிமா, தொலைக்காட்சித் துறைகள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றவுடன் நாடகம் பார்க்க வரும் கூட்டம், மெல்ல மெல்லக் குறைந்து, தனது கண் முன்னே நாடகத் துறையே நலிந்துபோவதைக் கண்டு வெதும்புகிறார் ஆதிமூலம். குடும்பத்தில் பேரனின் அறுவை சிகிச்சைக்கு பணத் தேவை என நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஆனாலும், சினிமாவில் நடிக்க அவர் மனம் ஒப்பவில்லை. விடாப்பிடியாக  நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார் ஆதிமூலம்.

ஆனால், அவரது கலை சாகவில்லை. கலையின் மீதான ஆர்வத்தில் அடங்க மறுக்கும் அவரது ஆன்மா, நாடகக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரின் உடம்பிலும் இறங்கி, தனது கலை தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறது. இதன்மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாகிறார் ஒரு நடிகர் (ராஜ்குமார்). ஆதிமூலத்தின் குடும்பமும், நாடகக் குழுவும் நல்ல நிலைமைக்கு வருகிறது. அதன்பிறகு சில காரணங்களால் நடிகருடன் ஆதிமூலத்தின் ஆன்மா ஒன்ற மறுக்கிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதமான மீதிக்கதை.

அய்யா ஆதிமூலமாக முதல் நாற்பது நிமிடங்கள் மட்டுமே வருகிறார் விஜய் சேதுபதி. ‘லவகுசா’வில் தொடங்கி ‘சத்தியவான் சாவித்திரி’, ‘ஔரங்கசீப்’ என மேடை நாடகத் துணுக்குத் தோரணமாய் படத்தின் தொடக்கக் காட்சிகள் வருவது சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும், வித்தியாசமான நாடக கதாபாத்திரங்களில், வித்தியாசமான தோற்றங்களில், வித்தியாசமான நடிப்பை வழங்கி பிரமாதப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி.

அய்யா ஆதிமூலத்தின் வலது கரமாகவும், நாடகக் குழுவின் மேலாளராகவும் வரும் இயக்குநர் மவுலி, தனது பக்குவமான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் நிறைகிறார்.

திரைப்பட நடிகர்களாக வரும் ராஜ்குமார், சுனில் இருவரும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி, ‘வீடு’ அர்ச்சனா, கருணாகரன் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

பார்வையாளர்கள் ஏற்கத் தயங்கும் சங்கதிகளை எல்லாம் இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா, ராம் ஆகியோர் மூலம் சொல்ல வைத்திருப்பது இப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நாடக நடிகர்களை திறமைசாலிகளாகவும், சினிமா நட்சத்திரங்களை திறமையற்ற அரைவேக்காடுகளாகவும் சித்தரித்திருக்கும் இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். என்னும், நம்பகத்தன்மை இல்லாத கதைப் போக்கும், காட்சிகளும் பொறுமையை சோதிக்கின்றன.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர் கெவின் ஹானியின் திறமையால், விஜய் சேதுபதியின் முதுமைப்பருவ தோற்றம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த் இயல்பை மீறாமல் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்.

‘சீதக்காதி’ – சிரித்து மகிழலாம்!