கனா – விமர்சனம்

போதிய கவனம் பெறாமல் இருக்கும் மகளிர் கிரிக்கெட்டையும், வாழ்வாதாரம் இழந்து கண்ணீர் சிந்தும் விவசாயிகளின் துயர வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் இணைத்து, அறிமுக இயக்குனரான நடிகர், பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் உருவாக்கியிருக்கும் ‘ஃபீல் குட் மூவி’ தான் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் ‘கனா’.

கரூர் மாவட்டம் குளித்தலையின் காவிரிப் பாசன விவசாயி சத்யராஜ். தன் மனைவி, மகளுக்கு இணையாக விவசாயம், கிரிக்கெட்டையும் ஒருசேர நேசிக்கிறார். தந்தையின் மரணத்துக்குகூட கலங்காதவர், கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதும் கண்ணில் நீர் ததும்பி நிற்கிறார். அப்பாவைப் பார்த்து வளரும் மகளான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அந்த கிரிக்கெட் ஆர்வம் அப்படியே தொற்றிக் கொள்கிறது.

பெற்ற தாய் தடுக்க, ஊரார் ஒருபுறம் கைகொடுக்க, எதிர்ப்பும், அணைப்புமாய் கிரிக்கெட்டுடன் இரண்டறக் கலந்து வளர்கிறார் ஐஸ்வர்யா. காவிரிப் பாசனப் பகுதியில் விவசாயம் நொடித்துப் போகிறது. கடன் நெருக்கடி கொடுக்க, அதற்கு மத்தியிலும் மகளின் கிரிக்கெட் ‘கனா’வை நிறைவேற்றப் போராடுகிறார் சத்யராஜ். மகள் வென்றாரா என்பதை உணர்வுப் பெருக்காய் காட்டுகிறது படம்.

தமிழக கிராமங்களோடு இரண்டற கலந்திருக்கும் கிரிக்கெட்டை மைய நாதமாகக் கொண்டு, ஆங்காங்கே மசாலா தூவி திரைப் படத்தை மணக்க வைத்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் கிரிக்கெட் விளையாட வரும்போது, ஊர் எதிர் கொள்ளும் விதம், அவர் தன் கனவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்போது உண்டாகும் சிக்கல் இதையெல்லாம் இயல்பாக சித்தரித்துள்ளார் இயக்குநர். காதல் இருந்தாலும், அநாவசியமான டூயட் காட்சிகள் இல்லாதது ஆறுதல்.

கிரிக்கெட்டையே ரசிக்காதவர்களும் ரசிக்கும்படியாக செய்த அந்த கடைசி 30 நிமிடங்களுக்காக இயக்குநர் மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன் என மொத்த படக்குழுவினரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ப தனது உருவம், உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்தையும் மாற்றிக் கொள்ள மெனக்கெடும் நடிகைகள் தமிழில் சொற்பம். ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கனா’வில் இதை 100 சதவீதம் செய்துகாட்டுகிறார். கிரிக்கெட் வீராங்கனை கவுசல்யா முருகேசனாகவே ஒவ்வொரு ஃபிரேமுலும் நிறைந்திருக்கிறார். அவரே படத்தின் ‘விமன் ஆப் த மேட்ச்’, நம் வீட்டுப் பெண் வெற்றி பெற்றால், கலங்கி நின்றால், தயங்கி நின்றால் என்ன உணர்வு வருமோ, அதைப் பார்வையாளருக்குள் படரவிடுகிறார் ஐஸ்வர்யா.

எப்போதும் சிரித்த முகமாக வரும் சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் சீரியஸ் டோன். 2-ம் பாதியில் பயிற்சியாளராக வரும் அவர் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

அப்பா பாத்திரத்தில் அப்படியே பொருந்துகிறார் சத்யராஜ். உடன் வரும் ‘என் உயிர் தோழன்’ ரமா, இளவரசு ஆகியோரும் கவர்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் வரும் இன்ஸ்பெக்டர் முனிஸ்காந்த் வழக்கமான பாணியில் இடம்பெற்றிருக்கிறார். தர்ஷன் காதல் டிராக் மற்றும் அவருடன் பயணிக்கும் சச்சின் – டெண்டுல்கர் பாத்திரங்கள், படத்தை பொழுதுபோக்காக நகர்த்த உதவுகிறது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்கும் வட இந்திய ஆதிக்கம், வங்கி கடன் பிரச்சினை போன்றவற்றை போகிற போக்கில் தொட்டுப் போவதைப் பாராட்டலாம்.

‘ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது; ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்’ என்பது போன்ற ‘பஞ்ச்’கள் ரசிக்க வைக்கின்றன.

குளித்தலை காட்சிகள் – உலகக் கோப்பை போட்டி காட்சிகள் இடையே ஒளிப்பதிவில் நுணுக்கமான வித்தியாசம் காட்டியிருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன். நேரில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் பந்துவீசும் காட்சிகளில் அரங்கை அதிரவைக்கிறது கரகோஷம்.

‘கனா’ – சாதிக்கத் துடிக்கும் மகள்களுக்கும், அவர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் ஊக்க மருந்து!