ஆவிகளின் நடமாட்டம்: ஒரு விஞ்ஞான ஆய்வு!

பிரிட்டன் நாட்டைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் விக்டாண்டி, ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றி ஒரு விஞ்ஞான விளக்கத்தை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கவென்ட்ரி பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஒருநாள் சகாக்களெல்லாம் போனபிறகும் ஆய்வில் மூழ்கியிருந்தபொழுது ஏற்பட்ட அதிர்ச்சி தரும் நிகழ்வே, ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றிய ஆய்வில் இறங்கத் தூண்டியதாக கூறுகிறார்.

மறக்க முடியாத அந்த நாளைக்குப் பிறகு, ஐந்து வருடங்கள் ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றிய கதைகளை, பாரம்பரியமான விளக்கங்களை சேகரித்திருக்கிறார். ஆவிகள் உலாவுவதாகக் கூறப்பட்ட, பழைய அரண்மனைகள், கோபுரங்கள், மாடங்கள் சென்றுள்ளார். விஞ்ஞான கருவிகளுடன் பல இரவுகள் ஆவிகளின் வருகைக்காக காத்துக்கிடந்திருக்கிறார். அதேவேளையில் அங்கு நிலவும் அதிர்வுகளை, சப்தங்களை, கருவிகள் மூலம் அளந்து கணக்கெடுத்து சேகரித்துள்ளார். தனது ஆய்வை துப்பறியும் கதைபோல் எழுதி ‘ஆவிகளின் நடமாட்டம்’ பற்றிய விஞ்ஞான விளக்கத்தையும் தந்துள்ளார்.

விக்டாண்டி தனது ஆய்வறிக்கையை கீழ்க்கண்டவாறு துவங்குகிறார். “அந்த இரவை என்னால் மறக்கவே இயலாது. கவென்ட்டரி யூனிவர்சிட்டியின் ஆராய்ச்சிசாலையில் சகாக்கள் எல்லோரும் போனது தெரியாமல் எனது ஆய்வில் மூழ்கிவிட்டிருந்தேன். மணியைப் பார்த்தேன். இரவு 7 மணி. புழுக்கமே இல்லாத சூழலில் எனது உடல் வியர்க்கத் துவங்கியது. யாரோ என்னை கவனிப்பதாக உணர்ந்தேன். சாம்பல் நிறத்தில் வடிவமற்ற பனிப்படலம் போன்ற உருவம் என்னை நெருங்கி வருவதை உணர்ந்தேன். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. என் அருகில் வந்தவுடன் அது மாயமாக மறைந்தது. சத்தம்போட்டு சபித்தேன். சுதாரிக்க பெருமூச்சு விட்டேன்…”

விக்டாண்டியின் ஆய்வு இப்படித்தான் துவங்குகிறது. ஒரு துப்பறியும் நாவல் போல் பிறகு விவரிக்கிறார். இடையிடையே மர்ம நிகழ்வுகளுக்கு விஞ்ஞான விளக்கமும் தருகிறார்.

ஒருநாள், எங்கிருந்து ஆவிகள் தோன்றுகின்றன என்பதை கண்டுபிடிக்க நேரிடுகிறது. காத்துக் கிடந்ததற்குப் பலன் கிட்டியது.

அன்று அவர் ஆய்வகத்திற்கு ஒரு நீண்ட வாளுடன் செல்கிறார். மறுநாள் நடக்கும் வாள் வீச்சுப் போட்டியில் கலந்துகொள்ள அதை தீட்டுவதற்காக எடுத்துச் செல்கிறார். வாளை இடுக்கியில் வைத்து நெறுக்கியவுடன் யாரோ அதிரச் செய்வது போல் வாள் அதிர்ந்தது. ஆராய்ச்சிசாலைக்குள் காற்றும் அசையவில்லை. நிசப்தம் நிலவுகிறது. பின் எப்படி வாள் அசைகிறது என்பதை கூர்ந்து கவனிக்கலானார். விஞ்ஞானி என்ற முறையில் இந்த அதிர்வு ‘ரிசோனன்ஸ்’ என்ற சப்த அலைகளின் குணாம்சங்கள் என்று மட்டும் முடிவுக்கு வருகிறார். கருவிகளைக் கொண்டு சப்த அலைவரிசைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அவர் அளக்கிறார். காதுகளால் உணர முடியாத சப்த அலைகள் ஆய்வகத்திற்குள் ஒரு பிரளயத்தை உருவாக்குவதை கருவிகள் காட்டுகின்றன. இதற்கான காரணத்தை தேடுகிறபொழுது, ஆய்வகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஏர்கண்டிசனரின் வெண்டி லேட்டர் இத்தகைய சப்த அலைகளை உருவாக்குவதைக் கண்டார். வெண்டிலேட்டரை அணைத்தவுடன் வாள் அதிர்வது நிற்கிறது. மீண்டும் போட்டவுடன் வாள் அதிர்கிறது. சப்த அலைவரிசையும், வாளின் அதிர்வு அலைவரிசையும் பொருந்துவதால் வாளும் அதிரத் தொடங்குகிறது என்ற முடிவுக்கு வந்தார்.

‘ரிசோனன்ஸ்’ என்ற அலைகளில் குணாம்சத்தை பயன்படுத்தித்தான் ரேடியோ, டி.வி.கள் இயங்குவதை நாம் அறிவோம். ‘ரிசோனன்ஸ்’ அல்லது ‘அனுதாப அதிர்வு’ என்று கூறப்படும் அலைகளின் இயல்பை விக்டாண்டி அறிந்தவராக இருந்ததால் அவரால் நிசப்தமான, காற்றோட்டமே இல்லாத இடத்தில் இடுக்கியில் வைத்த வாள் அசைவதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடிந்தது. இந்த விஞ்ஞான அறிவு இல்லாதவர்கள், வாளின் அதிர்வுக்கு, பாரம்பரியமாகக் கூறப்படும் கதைகளையும், மத அடிப்படையிலான விளக்கத்தையும் உண்மையென்று நம்பிக்கொண்டே இருப்பர்.

இதன்பிறகு அரண்மனைகள், கோபுரங்கள், மாடங்கள், அங்கு நடத்திய ஆய்வுகள் மூலம், எங்கிருந்து ஆவிப்படலம் பிறக்கிறது என்பதையும் அவரால் கண்டுபிடிக்க இந்த கண்டுபிடிப்பு உதவியது.

அரண்மனைக் காற்று தாக்கி வீசுகிறபொழுது காதுக்கு எட்டுகிற, காதுக்கு எட்டாத அலைவரிசைகளில் ஒலிகள் உருவாவதை கருவிகள் மூலம் பதிவு செய்து அலசினார். கனமான சுவர்களை காற்று வெளியே தாக்குகிறபொழுது, சுவர்களில் இருந்து பல ரகமான சப்த அலைகள் உருவாகி, சுவரைத் தாண்டி உள்ளே வருகிறது. இதனால் முனகல், அழுகை போன்ற சப்தங்கள் உள்ளே எழுகின்றன. அதோடு நமது கண் முழிகளின் அதிர்விற்கு பொருத்தமான சப்த அலைகள் உருவாகிறபொழுது, வடிவமற்ற உருவங்களை தோற்றுவிக்கிறது. இது தோற்றமே தவிர எதார்த்தமல்ல. “முழிகளில் ஏற்படும் அதிர்வே இதற்கு அடிப்படை” என்கிறார் விக்டாண்டி. “சப்த அலைகள் 18.98 ஹெர்ட்சிற்கு குறைவாக இருக்கிறபொழுது காதுகளால் அந்த சப்தத்தை கேட்க முடியாது. ஆனால், இந்த சப்த அலைகள் நமது கண் முழிகள் அதிர்வை ஏற்படுத்தி பூதகணங்களின் தோற்றத்தை உருவாக்கி வருகிறது” என்கிறார்.

இந்த ஆவிப்படலம், உண்மையில் இறந்தவர்களின் ஆவி அல்ல, சப்த அலைகளால் உருவாகும் ஒரு தோற்றம் என்பதை விக்டாண்டி உறுதிப்படுத்திவிட்டார். பிரிட்டன் நாட்டு அரண்மனைகளில் தான் ஆவிகள் அதிகம் உலவுவதாக கூறப்படுவதற்கான காரணத்தையும் விக்டாண்டி விளக்கியுள்ளார். “பிரிட்டன் என்பது ஒரு தீவு. கடல் காற்று வீசி அடிக்கும் தூரத்தில் தான் பல அரண்மனைகள் உள்ளன. எனவே, இந்த சப்த அலைகளின் ரிசோனன்ஸ், பல பிரமைகளை உருவாக்குகிறது” என்றும் தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.

விக்டாண்டியின் ஆய்வு மூலம் கூறப்படும் காரணங்கள் தவிர, வேறு விஞ்ஞான காரணங்களும் இருக்கக் கூடும். வெகுவிரைவில் விஞ்ஞானிகள் அதனையும் கண்டுபிடித்து விடுவர்.

விஞ்ஞானம் மதம் எல்லைப் போர்

விஞ்ஞானத்திற்கும், மத நம்பிக்கைகளுக்கும், நெடுங்காலமாக எல்லைப் போர் நடந்து வருவதை நாம் அறிவோம். மத நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்படும் விளக்கங்கள் பலவற்றை விஞ்ஞான விளக்கம் தவிடு பொடியாக்குவதையும் காண்கிறோம்.

மதத் தலைவர்களும், ஒரு காலத்தில் விஞ்ஞானத்தை ஒழிக்க முயன்றவர்கள், இன்று விஞ்ஞானத்தோடு சமரசம் செய்யவும் முன்வருகின்றனர். இவ்வாறு செய்யவில்லையானால், மதம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என இப்போது பயப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் விஞ்ஞானக் கருத்துக்கள் சரிதானா என்பதற்கு மத பீடங்களின் கருத்துக்களே ஆதாரமாக இருந்தது. விஞ்ஞானக் கருத்துக்கள் சரிதானா என்பதை நிரூபிக்க, புனித நூல்களில் குறிப்பிடப்பட்டவைகளையே ஆதாரமாகக் காட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது. கலீலியோ கண்டது, பைபிளில் இல்லாததால் அவரைத் தண்டித்தனர். இன்றும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மத பீடங்கள் ஏற்க மறுக்கின்றன.

ஆனால், இன்று நிலைமை முற்றிலும் நேராக்கப்பட்டு விட்டது. மதக் கருத்துக்கள் சரிதானா என்பதற்கு விஞ்ஞானம் ஆய்விற்கு உட்படுத்திடும் நிலை வந்துள்ளது. இது மானுட நாகரீகத்திற்கு ஏற்பட்ட ஆகப்பெரிய முன்னேற்றமாகும்.

இருந்தாலும், விஞ்ஞானக் கருத்துக்கள் பரவாத சூழலில் மதவாத நடவடிக்கைகள் மக்களை ஆட்டிப் படைப்பதை காண்கிறோம். இன்றைய இளைய சமூகம் விஞ்ஞானக் கருத்தைப் பரப்ப இயக்கமாக ஆகவேண்டும், சர்ச்சைகளைத் தூண்ட வேண்டும்.

– மீனாட்சிசுந்தரம்.வே

Courtesy: Marxist.tncpim.org