’நான் ஏன் காந்தியை கொன்றேன்’ படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மாபாதகன் நாதுராம் கோட்சே, தன் கொடூர செயலை நியாயப்படுத்தி முன்வைத்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “நான் ஏன் காந்தியை கொன்றேன்”. இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால் மகாத்மா காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்தன.  இதையடுத்து இந்த படத்தை  தடை செய்ய வேண்டும் என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. பின் இந்த படத்தை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், மீளமுடியாத பாதிப்பு ஏற்படும்.  நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்துகிறது. அவரை கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும். இப்போதும் கூட மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளது.