மலைகளை அழித்தால் நமது வாழ்வாதாரமும் அழிந்து போகும்!

ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில கூறி இருப்பார்:

“இயற்கை வளங்கள் இருவகைப்படுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணெய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்துகொண்டே போகும். இவை மீண்டும் தன்னுடைய அளவை அல்லது எண்ணிக்கையினை அதிகரித்துக்கொள்ள நெடுங்காலம் எடுத்துக் கொள்ளும். அரிசி, மரம், பழம், காய்கள் போன்றவை இன்னொரு வகையான இயற்கை வளங்கள். இது போன்ற பூமியில் விளையும் வளங்களை திரும்பத் திரும்ப உற்பத்தி செய்துகொள்ள முடியும். இவை புதுப்பிக்கக் கூடிய வளங்கள் (Renewable Energy) என்று கூறப்படுபவை. இதில் முதலில் கூறப்பட்ட இயற்கை வளங்கள் பேராசையின் வெளிப்பாடுகள். அவை அனைத்தும் எடுக்கும்பொழுது அழிவிற்கும் வன்முறைக்குமே இட்டுச் செல்லும்.”

அது எப்படி இரும்பு, நிலக்கரி, செம்பு அனைத்தும் அழிவிற்கான அறிகுறிகளாக இருக்க முடியும்? மாறாக, அவைதானே நமது முன்னேற்றத்தின் முகங்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றுகிறதா? இவை எல்லாம் எடுக்காமல், அதனை பயன்படுத்தாமல் எப்படி இந்திய அரசை வல்லரசு ஆக்க முடியும் என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழுகிறதா? அப்படியெனில், இதன் மூலம் நிகழ்த்தபட்ட வன்முறையையும், நிகழ்ந்துகொண்டிருக்கும் அழிவையும் அறிந்துகொள்ள கொஞ்சம் கீழே படியுங்கள் நண்பர்களே…

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வாழும் மக்களின் உடல்நலத்தைப் பொறுத்தே அமைகிறது. அவர்களின் உடல்நலத்திற்குத் தேவையான உணவு மண்வளத்தை சார்ந்தே உள்ளது. மண் வளம் என்பது அந்நிலப்பரப்பின் மழை வளத்தையே ஒட்டியே இருக்கும். மழை வளம் என்பது அந்த நாட்டின் மலை வளம் சார்ந்தே இருக்கும். சில நூற்றாண்டு முன்பு வரை இதே மண்ணில் தான் மாதம் மும்மாரி பெய்து கொண்டிருந்தது. மும்மாரி பெய்த அதே நாட்டில் தான் இன்று வருடம் மும்மாரி பெய்வதே அரிதாக உள்ளது. இதற்கான காரணமாக Global Warming என்று ஒற்றை காரணத்தினை சொல்லிவிட்டு கடந்து சென்றவிட முடியாது. மெல்ல மெல்ல, எதோ சிலரின் சுயநலன்களுக்காக மேலே கூறப்பட்ட புதுபிக்க முடியாத இயற்கை வளங்கள் கொள்ளை போய்க் கொண்டிருப்பதே அத்தனைக்கும் காரணம்.

முன்பு கூறியது போல, ஒரு நாட்டின் மழை வளம் அந்நாட்டின் மலை வளத்தை சார்ந்தே இருக்கும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட இந்தியாவில், இருநூறு ஆண்டுகள் முன்பு வரை, கேரளாவில் ஆரம்பித்து புனே வரை செல்லும் மேற்கு தொடர்ச்சி மலை நெடுகிலும், முழுதிலும் நூறு அடி முதல் இருநூறு அடி வரை உயரம் கொண்ட மரங்களால் சூழப்பட்டு இருந்தது. அப்பொழுது அரபிக் கடலில் இருந்து காற்று மூலம் நகர்ந்து செல்லும் மேகங்கள் இந்த ராட்சத உயர மரங்களால் தடுக்கப்பட்டு, இவை வெளியிடும் காற்றால் உருக்கப்பட்டு, மழையாக மும்மாரி பெய்து கொண்டிருந்தது. அவற்றின் காரணமாக வளமான விவசாயமும் இங்கு நடந்தே வந்தது. மலை வளம் நன்றாக இருந்ததால் இந்நாட்டின் வளமும் நன்றாகவே இருந்தது. அன்று நமது நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார் இந்த மலைப் பகுதிகளில் அவர்கள் விரும்பி பருகும் தேநீர் செடிகள் நன்றாக வளரும் என்பதை அறிந்து கொண்டபின்பு, அங்கிருந்த இருநூறு அடி உயர மரங்கள் அதிகமான எண்ணிகையில் வெட்டபட்டன. அதற்கு மாறாக அங்கு அவர்கள் விரும்பி அருந்துவதற்கான இரண்டு அடி உயர காபி செடிகள் வளர்க்கபட்டன. பின்பு வானில் நீந்திவரும் மேகங்களை தடுக்கவும் மரங்கள் இல்லை, அதை உருக்கவும் மரங்கள் இல்லாமல் போனது. மரவளம் குறைந்ததால், மலை வளம் குன்றியது. மலை வளம் குன்றியதால் மழை வளமும் பொய்த்தது. யாரோ ஒருவன் தேநீர் அருந்துவதற்காக நமது மழை நீரை இழந்து நின்றோம். ஆம் நண்பர்களே… இளநீர், பதநீர், நுங்கு நீர், பழசாறு, மோர், சோற்று நீர், சுக்கு நீர் என எத்தனையோ வகை பானங்கள் நமது மரபில் இருந்திருக்கின்றன. ஆனால் தேநீர் என்ற ஒன்றே நமது மரபில் இருந்தது இல்லை. இன்று நீங்கள் பருகிக் கொண்டிருக்கும் தேநீர் என்பது மலை வளம் சீரழிக்கப்பட்டு யாரோ சிலர் பணம் படைப்பதற்கான உங்களின் பங்களிப்பு.

அன்று வெள்ளையர்கள் தான் இவ்வாறு மலை வளத்தை சீரழித்துச் சென்றார்கள் என்றால், இன்று சுதந்திர இந்தியாவில், ஜனநாயக இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். கிரானைட் தொழிற்சாலைகளால் பல மலைகள் ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்டன. இப்பொழுது திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் உள்ள வேடியப்பன் மலை, கவுத்திமலை போன்ற மலைகளுக்கு அடியில் மேலே குறிப்பிட்ட புதுப்பிக்க முடியாத வளங்களான இரும்பு இருப்பதை அறிந்துகொண்டு ஒரு பெருநிறுவனம் நமது அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையினை முன்வைக்கிறது. அதாவது, இந்த மலையில் இருக்கும் இரும்புகளை எடுக்க ஒரு டன்னுக்கு 46 ரூபாய் அரசாங்கத்திற்கு செலுத்துவோம் என. அதற்கு அரசாங்கமும் ஒப்புதல் அளிக்கிறது. ரூபாய் 46 ரூபாய்க்கு அரசாங்கத்திடம் பெறப்படும் இரும்பு தான் சந்தையில் 4000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட எதோ ஒரு நிறுவனம் நூறு மடங்கு லாபம் பார்ப்பதற்காக நமது மலை வளங்களை அழித்து ஒழிக்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். இது தமிழகத்தில் இந்த மலைகளில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் ஒன்றல்ல. வட மாநிலங்களில் மலைகளுக்கு அடியில் இருக்கும் இயற்கை வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மலைவாழ் மக்கள் துரத்தி அடிக்கப்படுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இயற்கை வளங்களை எடுப்பதற்காக அத்தனை விளைநிலங்களையும் அழிப்பதற்கு தயாராகி விட்டோம். இப்படி சொல்லிக்கொண்டே செல்ல முடியும்.

இதை எல்லாம் பார்க்கும்பொழுது உண்மையில் இது சுதந்திர இந்தியாதானா என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆம் நண்பர்களே… கொஞ்சம் உற்று நோக்குங்கள். உங்களுக்கும் புரியும். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்லப்படும் வெள்ளையர்கள் கூட மலையின் மீதிருந்த மரங்களை மட்டும் தான் வெட்டியழித்துவிட்டு சென்றனர். ஆனால் நமக்கான ஆட்சி, இந்த நாட்டின் நலனுக்கான ஆட்சி, சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் இன்றைய ஆட்சியில் அந்த மலைகளே மொத்தமாக தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன யாரோ சிலரின் சுய நலன்களுக்காக. இப்படி இருக்கும்பொழுது எப்படி இதனை சுதந்திர இந்தியா என்று சொல்ல முடியும்? சுதந்திரம் என்னும் போர்வையில் அடிமைத்தனம் மட்டுமே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

மலையை அழிப்பது முன்னேற்றம் அல்ல. அது குறைய குறைய மழை வளம் குறையும். மழை வளம் குறைந்தால் உணவு உற்பத்தி குறையும். உணவு உற்பத்தி குறையும்பொழுது உணவிற்காக மக்களை அது வன்முறைக்கே இட்டு செல்லும். இதை தான் ஜே.சி.குமரப்பா கூறி இருக்கிறார் புதுபிக்க முடியாத வளங்களை எடுத்துக் கொண்டிருந்தால் அவை அழிவிற்கும், வன்முறைக்கும் தான் இட்டு செல்லும் என்று. உணவு பொருட்களின் விளைச்சல் குறைந்து அதன் விலை ஏற்றம் கூட ஒரு வகையில் வன்முறையே. அந்த வன்முறைதான் இன்று இந்த இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக நடந்துகொண்டிருக்கிறது. மலை என்பது வெறும் கல்லும், மண்ணும், மரமும், விலங்கும், பறவையும், தாதும், கனிமமும் கொட்டிக் கிடக்கும் கிடங்கு அல்ல. அவை நிலபகுதியில் வாழும் உயிர்களின் வாழ்வாதாரம். பொருளாதார வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி இதனை அழித்து விட்டால், கூடவே சேர்ந்து நமது வாழ்வாதாரமும் சேர்ந்தே அழியும்.

BALASUBRAMANI DHARMALINGAM

Read previous post:
0
Why the Fight for Environmental Justice Is Also a Fight for Social Justice

On June 5 – World Environment Day – newspapers and TV channels are likely to be awash with ritualised stories about

Close