“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்க கூடாது!”

“அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்கக் கூடாது. ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள்” என்று அலங்காநல்லூர் மக்களை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது:

அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்கக் கூடாது. போராடிய மாணவர்களை, இளைஞர்களை, மீனவர்களை, பொதுமக்களை அடித்து, உதைத்து, அவமதித்து, அழிமதி செய்து, அவர்கள் மீது பொய் வழக்கும் போட்ட ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் எந்த தார்மீக அடிப்படையில் இந்தப் பொறுப்பை ஏற்க விரும்புகிறார்?

அலங்காநல்லூர் மக்கள் அவர்களுக்காக, தமிழினத்திற்காகப் போராடிய தமிழ் மாணவர்களை, இளைஞர்களை அவமதிக்கக் கூடாது.

ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள். வையகம் உங்களைப் போற்றும். தகுதியற்றவர்கள், துரோகிகளுக்கு அந்தப் பெருமையைக் கொடுத்தால், வையகம் உங்களைத் தூற்றும்.

அலங்காநல்லூர் தமிழினத்தின் அடங்காநல்லூராக இருக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம சல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர்ராகவன், துணைத் தலைவர் வி.பெரியசாமி, பொருளாளர் டி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும்; வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம சல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் சி.செல்லத்துரை, செயலாளர் பி.கார்த்திகைராஜன், பொருளாளர் ஏ.டி.சுப்புராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும்; அவனியாபுரம் கிராம சல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஏ.கே.கண்ணன், செயலாளர் எம்.ராமசாமி, துணைத் தலைவர் ஓ.பெரியசாமி, பொருளாளர் ஏ.மாயாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளும் தனித் தனியே நேரில் சந்தித்து, “சல்லிக்கட்டு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக (?) எடுத்து, நமது கலாசாரப் பெருமைகளை கட்டிக் காத்த (?), மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறு உருவமாகத் திகழும் (?) சசிகலாவுக்கு” தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தலைமையேற்று தொடங்கி வைத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த சந்திப்பு நிகழ்வின்போது, அ.தி.மு.க. புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கி.மாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

சல்லிக்கட்டு உரிமையை சட்டரீதியாக மீட்பதோடு மாணவர்கள் நிறுத்திக்கொள்ளாமல், சல்லிக்கட்டு விளையாட்டை இந்த ‘சல்லிக்கட்டு விழா குழுவினர்’ எனும் நக்கிகளிடமிருந்தும் மீட்க வேண்டும் என்பதையே இன்றைய சந்திப்பு நிகழ்வு உணர்த்துகிறது.