“என் ரசிகர்கள், தொண்டர்கள் பதட்டம் அடைய வேண்டாம்”: சரத்குமார் வேண்டுகோள்!

“தென்னிந்திய” நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அவ்விருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.

இது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின்படி சரியானதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல.

என்னை இன்று தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட ரசிகர்களுக்கும் இயக்கத்தின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி.

அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்

எனவே எனது அன்புக்கினிய ரசிகர்களும், தொண்டர்களும் எந்த ஒரு பதட்டமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.