“சக்க போடு போடு ராஜா’ முழு காமெடி விருந்தாக இருக்கும்!” – சந்தானம்

“5 காமெடி நடிகர்கள் சேர்ந்து நடித்திருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்” என்று இப்படத்தின் நாயகன் சந்தானம் கூறியுள்ளார்.

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில், பிரபல நடிகர் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’ . வருகிற (டிசம்பர்) 22ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சந்தானம் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சேதுராமன் இயக்கியுள்ளார்.

நாளை (டிசம்பர் 6ஆம் தேதி) இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதை ஒட்டி, இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகன் சந்தானம் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டி இல்லை. போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா’ படம் போட்டியாக இருக்கும்.

விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 காமெடி நடிகர்கள் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்.

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். இதற்கான பதிலை சிம்பு நாளை நடைபெறும் `சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் அளிப்பார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு தற்போதைக்கு இல்லை.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

இச்சந்திப்பில் நடிகரும், தயாரிப்பாளருமான விடிவி கணேஷ், நடிகர் ரேபோ சங்கள் உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர்.