எஸ்.எஸ்.குமரன் இசையில் ‘கனமழையில் பாடம் பயில்வோம்’

பூ, களவாணி படங்களின் மூலம் தமிழ் திரையுலகத்தின் மிக முக்கியமான இசையமைப்பாளராக அறியப்பட்டவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து படங்களையும் இயக்கிவரும் அவர், தற்போது எல்.ஐ.சி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த பணிகள் ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் கடலூர் வெள்ள சேதங்களை பற்றி ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

‘வடகிழக்கு பருவ மழை, வர வைத்ததே கண்ணீர் மழை…’ என்ற வரிகளுடன் துவங்கும் அந்த பாடலை பிரபல பாடகர் உன்னிமேனனின் மகள் உத்ரா உன்னி பாடியிருக்கிறார். தரண் எழுதிய இந்த பாடலின் வரிகளும், அதற்கு அமைக்கப்பட்ட எஸ்.எஸ்.குமரனின் மெட்டும், உத்ரா உன்னியின் குரலும், நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. வெள்ள நேரத்தில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது இப்பாடல்.

இந்த பாடலை பிரபல ஆடியோ கம்பெனியான ட்ரென்ட் மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் வரும் தொகையை வெள்ள நிவாரணத்திற்காக வழங்கவும் முன்வந்திருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.