பாண்டே – சம்பத் – குணசேகரன்: யாருடைய குரல்கள் இவை?

தமிழ் ஊடகச் சூழலில் நேர்ந்துகொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்த ஒரு ஆய்வு தொடர்பாகவும், தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் நாஞ்சில் சம்பத்தின் இரு தொலைக்காட்சி நேர்காணல்களையும் (பு.த & தி.த) கடந்த இரு தினங்களுக்குள்ளாக சில பல முறை பார்க்க நேர்ந்தது. இதன் தொடர்ச்சியாக செய்தியாக்கத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு, வெகுமக்கள் அரசியல் தளத்தில் கட்சியாளர்களின் நிலை ஆகிய இருபரப்பிலும் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தைத் துலக்கமாக உணர முடிகிறது.

இது Interactive Journalism காலம். ஊடக வியாபாரம் மட்டுமல்லாமல், ஊடகப் பயனீட்டாளர்களின் மத்தியிலும் (இப்போது அவர்களின் பெயர்கள் வாசகர்களோ, நேயர்களோ அல்ல- ‘Users’) கடும்போட்டி நிலவும் காலம். ஒரு செய்தியை ஒரு பத்திரிகையாளன் எப்படிப் பார்க்கிறான் என்று இருந்த நிலை போய் – பயனீட்டாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், செய்தியோடு எப்படி ஊடாடுகிறார்கள் என்று பார்க்கும் நிலையில் இருக்கிறோம். செய்தியாளர்களின் கோணங்கள் பல சமயங்களில் பயனீட்டாளர்களின் கோணங்களோடு போட்டியிட்டுத் தோல்வியையே தழுவுகின்றன. இந்நிலையில் பயனீட்டாளர்களின் கவனத்தைப் பெறும் வகையில் ஒரு செய்தியாளர் இயங்குவது இன்றளவில் ஆகப்பெரும் சவாலான காரியமாகவே இருக்கிறது. இப்படியொரு சவாலை முந்தைய தலைமுறை செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் சந்தித்ததில்லை. நாஞ்சில் சம்பத் விவகாரத்தில் பாண்டேவும் குணசேகரனும் இந்த விதத்தில்தான் போற்றப்படுகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க – தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை பத்திரிகை சுதந்திரம் என்பது பத்திரிகை முதலாளிகளின் சுதந்திரம்தான் என்று முன்பு இருந்த காலம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பத்திரிகை முதலாளிகளின் சுதந்திரம் என்பது பெரும்பாலும் தொழில் ஆதாயம் சார்ந்த சாதகபாதகங்களையும், அப்புறம் உள்ளார்ந்து கொஞ்சம் வருணாசிரம அடிப்படையிலும் இயங்குவது. ஒரு ஆட்சி மாறும் முதல்நாள் காலைவரை முந்தைய ஆளும்கட்சிக்குக் கொடி பிடிக்கும் தினத்தந்தி, ஆட்சி மாறும் நள்ளிரவு முதலே அடுத்த ஆளும் கட்சிக்கு பேனரை மாற்றும் தத்துவத்தின் அடிப்படை இதுதான்: Survival of the fittest! ஆளும்கட்சி மற்றும் அரசின் மூலம் ஒரு தினசரிப் பத்திரிகைக்குக் கிடைக்கும் விளம்பர வருவாய் அப்படி. இந்நிலையில் தினத்தந்தி நிறுவனத்தால் நடத்தப்படும் தந்தி தொலைக்காட்சியும் நிச்சயமாக ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தொலைக்காட்சியாகத்தான் செயல்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் அங்கே ஒரு பாண்டேவின் எதிர்மறை ஆட்டம் இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறது.

புதிய தலைமுறை குழுமமும் இந்த விதிக்கு அப்பாற்பட்டதல்ல. ஹெலிகாப்டரில் பறந்தெல்லாம் சென்னை வெள்ளத்தைப் படம் பிடித்த அந்நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஏரிகளின் மீது எழுந்து நிற்கும் தங்கள் முதலாளியின் கல்லூரிக் கட்டிடங்களின் கூரைகளைக் கடந்தபோது மட்டும் கேமிரா லென்ஸை கவர் போட்டு மூடிக்கொண்டதை நாம் அனைவரும் அறிவோம். தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளின் தயவு இல்லாமல் இவர்களின் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியும் வாழ்வும் சாத்தியமில்லை என்பதும் நாம் அறிந்ததே. எனினும் அங்கே ஒரு குணசேகரன், தனக்கு எதிரில் ஆளும்கட்சியின் குரலாய் அமர்ந்திருப்பவரை வறுத்தெடுக்கிறார். இங்கும் நம் எதிர்பார்ப்பு பொய்யாகிறது.

பாண்டேவும் குணசேகரனும் நமக்கு எதை உணர்த்துகிறார்கள்? இவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஆளும் அரசுக்கு எதிரான அநீதியைக் கண்டு பொங்கும் நிறுவனங்கள் என்பதையா? அல்லது – அந்த நிறுவன முதலாளிகள் தங்களின் சுய இலாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு செய்தியாளருக்கான சுதந்திரத்தை மட்டற்ற முறையில் வழங்கியிருக்கிறார்கள் என்பதையா?

இரண்டும் இல்லை. உண்மையில் இந்த ஊடகங்களும், ஊடக நிறுவன முதலாளிகளும் சென்ற தலைமுறை வாசகர்களைப் போல் அல்லாமல் குறுக்குவெட்டாக இயங்கும் இந்த தலைமுறை பயனீட்டாளர்களைப் பார்த்து பயந்திருக்கிறார்கள். செய்தி என்னும் போர்வையில் அதிகார வர்க்கத்துக்கு சாமரம் வீசி பம்மாத்து பண்ணும் வேலையெல்லாம் இனி ஆகாது. நேர்மையைத் துறக்கும் ஊடகங்கள் களத்திலேயே பலியிடப்படும் அபாயம் இப்போது உருவாகியிருக்கிறது. ‘எண்பது வருஷமா பத்திரிகையில நம்பர் ஒன்னாக்கும் நாங்க’ என்னும் நரசுஸ் காஃபி சிரிப்பின் ஆவியெல்லாம் ஆறி அடங்கிவிட்டது. ’சரி என்ன இப்போ…?’ என்று கேட்கிறார்கள் நமது ட்விட்டர்கள். தொழில் ஒழுங்காக நடக்கவேண்டும் என்றால் தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்னும் நிலைக்கு செய்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. பாண்டேவும் குணசேகரனும் நமக்கு இதைத்தான் உணர்த்துகிறார்கள்.

மற்றொருபுறம், நாஞ்சில் சம்பத் நமக்கு வேறொன்றை உணர்த்துகிறார். சம்பத்தின் குரலில் தொனிப்பது ஆணவமோ, அகம்பாவமோ அல்ல. நிதர்சனம். அது இன்றைய ஜெயலலிதாவின் குரல். நேற்றைய கருணாநிதியின் குரல். ஒருவேளை நாளைய விஜயகாந்த்தின் குரலாகக்கூட இருக்கலாம். இதுநாள் வரை நம்மை ஆட்சி செய்தவர்களின் உண்மை வடிவம் இதுதான் என்பதை தன் குரல் மூலம் உணர்த்தியிருக்கிறார் சம்பத்.

அறுபது ஆண்டுகால அரசியல் சாணக்கியம், சாதுர்யம் எல்லாம் இதே பயனீட்டாளர்களின் தொடுதிரை வழியே துருப் பிடித்து உதிரத் தொடங்கியிருக்கின்றன. இந்த எலிகள் வேட்டையாடப்படும் காலம் தொடங்கிவிட்டது. பாண்டே -குணசேகரன்களின் கேள்விகள் உண்மையில் அவர்களுடையவை அல்ல. நம்முடையவை. நம் பயனீட்டாளர்களுடையவை. இந்த சொற்களில் தெறிக்கும் ஒளியை எதிர்கொள்ள வார்த்தைகள் இல்லாமல் கண்கள் கூசிப்போய்த் தான் ‘ஆமாம் நாங்க அப்படித்தான், இப்ப என்னங்கறே…?’ என்று கேட்கிறார் சம்பத். இதைக்கூட கேட்கத் திராணியில்லாமல் ஓடி ஒளிகிறார் ஜெயலலிதா. ‘நானும் உங்க ஆளுதாங்க’ என்று வேட்டி சட்டையை உதறி மக்களோடு மக்களாக நின்று தப்பித்துக்கொள்ள முயல்கிறார் ஸ்டாலின். இது எதுவுமே புரியாமல் எச்சிலைக் காரி உமிழ்ந்துகொண்டிருக்கிறார் விஜய்காந்த்.

இதையெல்லாம் நிகழ்த்தியிருப்பது நமது ஹேஷ்டேக் பயனீட்டாளர்கள் (’#’ Users). இந்த செய்தி நிறுவன முதலாளிகளும், பேரரசியல் கனவான்களும் இனி அவ்வளவு சீக்கிரம் நம்மை ஏமாற்றிவிட முடியாது. Interactive Journalism போல Interactive Politicsஐ நோக்கி நாம் நகர்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

– ஜிபி யோகேஸ்வரன்