‘விசாரணை’ ஒரு மனிதஉரிமை காவியம்! – சுப.உதயகுமாரன்

பாலிவுட், கோலிவுட் படங்களை மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் பொறுமையோ, நிதானமோ எனக்கு கிடையாது என்பதாலும், சினிமாத்தனமான கதைசொல்லலில் எனக்கு விருப்பம் இல்லையென்பதாலும், சினிமாப் பேர்வழிகள் பலர் தமிழ்ச் சமூகத்தை சீரழித்து நாசம் செய்திருப்பதாலும் நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. கூடங்குளம் போராட்டத்திலும், தமிழர்நல விடயங்களிலும் உண்மையான அக்கறை காட்டும் இயக்குனர்கள் தோழர்கள் ராம், வெற்றிமாறன், புகழேந்தி தங்கராஜ், தாமிரா, கெளதமன், தங்கர்பச்சான், மிஸ்கின் போன்றோர் அறிமுகமான பிறகு குறைந்தபட்சம் அவர்களின் படைப்புக்களையாவது பார்க்கவேண்டும் என்று விரும்பி ‘தங்கமீன்கள்’ படம் மட்டும் இதுவரை பார்த்திருக்கிறேன். கடந்த வாரம் புதுக்கோட்டையில் தம்பிகள், நண்பர்கள் சிலருடன் ‘விசாரணை’ படம் பார்த்தேன்.

இந்தப் படம் கடந்த ஆண்டு சென்னை கிண்டிப் பகுதியில் படமாக்கப்பட்டபோது தோழர். வெற்றிமாறனை ஒருநாள் ‘செட்’டில் சந்தித்தேன். படப்பிடிப்பில் இருந்த அவரோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த இளம் பெண்காவலர் காவல் நிலையத்துக்குப் பின்னால் வந்து முகம் கழுவுவது, கைதிகளுக்கு உதவுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதைப் பார்த்தேன். சினிமாவில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல என்பது தெளிவாகப் புரிந்தது. விடைபெறும்போது நடிகர்களும், படப்பிடிப்புக் குழுவினரும் நிறைய நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

அவர்கள் அனைவரின் உழைப்பும், நண்பர் வெற்றிமாறனின் சிரத்தையும் இப்படி ஒரு மனிதஉரிமை காவியமாக வெளிவரும் என்பது எனக்கு அப்போது தெரியாது. மண்ணுலகின் மீதான எளிய மக்கள் வாழ்வை நீதியற்றதாக, நியாயமற்றதாக மாற்றி வைத்து, அவர்கள் துன்பமடைவதை, துயருறுவதை இயற்கை என்றாக்கி வைத்து, அவர்களை இன்னும் கொடூரமாகக் கொடுமைப்படுத்தும் அவலத்தை இதைவிட ஆழமாக, அழுத்தமாக எந்தக் கவிஞரால், கதைசொல்லியால், நாடகாசிரியரால் சொல்லிவிட முடியும் என்று தோன்றியது.

தேசியக் கொடியை எரித்தார் என்கிற காரணத்துக்காக தம்பி திலீபன் மகேந்திரனை சில காவல்துறையினர் அண்மையில் கொடுமைப்படுத்தி, அவரது கையை, விரல்களை உடைத்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. “சனநாயக” இந்தியாவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் இம்மாதிரியான ‘விசாரணை’கள் பாசிசத்தின் படிக்கட்டுகளாகவே அமைகின்றன.

‘விசாரணை’ மீதான விசாரணையைத் துவங்கவும், காக்கித்துறையின் விசாரணைகளிலிருந்து பேரறிவாளன்கள், சாந்தன்கள், முருகன்கள், திலீபன்கள் காக்கப்படவும், காவித்துறையின் விசாரணைகளில் முகமது அக்லக்குகள், தபோல்கர்கள், பன்சாரேக்கள், கல்புர்கிகள் மீண்டும் கொல்லப்படாதிருக்கவும் வெற்றிமாறன் படைப்பு உதவட்டும்!

 – சுப. உதயகுமாரன்

ஒருங்கிணைப்பாளர்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

கூடங்குளம்