அர்ஜூன் சம்பத் மிரட்டலுக்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ பதிலடி!

“நதிகளை இணைப்போம் என்பது இப்பூமி மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரிய வன்முறை” என்று ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அறிவோ, தெளிவோ இல்லாத இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், “நதிநீர் திட்டத்தை எதிர்த்தால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது” என ரவுடித்தனமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுத்திருக்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு, “மக்கள் நலனில் அக்கறையும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்கள் நதி நீர் இணைப்பு திட்டத்தை எதிர்க்கவே செய்வார்கள். குறுகிய அரசியல் லாபங்களுக்காக ஆதரிப்பவர்களிடம் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்காது. மிரட்டல்களே இருக்கும். பூவுலகின் நண்பர்கள் நதி நீர் இணைப்பு திட்டத்தை நிச்சயம் தொடர்ந்து எதிர்க்கும். அது சூழல் விரோத திட்டம் மட்டுமல்ல, மக்கள் விரோத திட்டமும் கூட” என தெரிவித்துள்ளது.