பரியேறும் பெருமாள் – விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேறும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு.
சுற்றி தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் வனாந்திரத்தின் தெற்கிலிருந்து பாதி தீக்காயங்களுடன் தப்பித்து வந்த சிறு பறவை ஒன்று பெருங்குரலெடுத்து, அந்த தீயின் கோடூரம் குறித்து எச்சரிக்கிறது. அந்த சிறுபறவையை அள்ளி அணைத்து, அதன் நியாயமான கோபங்களுக்கு செவி கொடுப்பதே நாம் செய்ய வேண்டியது. அதன் வலி வெறும் ஆறுதல்களால் அடங்கிப் போவதில்லை, தீர்வை நோக்கி நகர்கிற இந்த பொது சமூகத்தின் நேர்மையே அந்த காயம் ஆற்றும் மருந்து.
பல நாட்களாய் ஆறாத காயமொன்று தன் புண்வாயினைத் திறந்து, தன்னைக் காயப்படுத்தியவர்கள் குறித்தும்.. அந்த ரணம் குறித்தும் பேசும் போது.. அதற்கு முகம் கொடுக்க முடியாமல் முடங்கிக் கொள்வதைத் தவிர செய்வதற்கு ஏதும் தெரியவில்லை. அந்த காயம் தன்னைப் பற்றி மட்டுமே பேசாமல் உடலெங்கும் உள்ள தழும்புகளைக் குறித்தும் எடுத்துரைக்கும் போது, ஈரக்குலையிடுக்கில் ஊசியொன்று இறங்குவதை உணரலாம். அது தன் கதையை கூறி முடிக்கும் போது நடுங்கிக் கொண்டிருக்கும் உடலை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு சில மணித்துளிகள் தேவைப்படலாம்.
பரியன், ஜோ இவர்களின் அழகான நட்பு, அதிலிருந்து வெடித்துக் கிளம்பும் ஜாதிய பகை, அந்த பகையின் ஊடே இந்த சமூகம் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் ஜாதிய வன்மம் ஆகியவற்றை நேர்த்தியாக கோர்த்து ஒரு வாழ்வியலுக்கான சினிமாவை வார்த்தெடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் ஜாதியை, இப்படியான குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வேறெந்த இயக்குநரும் படம் பிடித்துக் காட்டியெதே இல்லை. எங்கெல்லாம் ஜாதி பதுங்கும், எங்கெல்லாம் பாயும் என்பதை மிக நுணுக்கமாக எடுத்துப் போடுகிறார். அவை ஒவ்வொன்றும் இந்த ஜாதிய சமூகத்திற்கெதிரான ஆவணங்கள்.
எத்தனையோ மரணங்களை வெறும் செய்திகளாக கடந்து போகும் நமக்கு, பரியேறும் பெருமாள் காட்டும் மரணங்கள் பெரும் திகைப்பைத் தரும். பரியனுக்கும், ஜோவுக்கும் இடையிலான தும்பை நிறத்திலான நட்பு நெகிழச் செய்யும். பரியனின் அப்பாவிற்கு நேர்கிற அந்த சம்பவம் உடைந்தழச் செய்யும். பரியனின் தேவதைகள் அனைவரும், எப்போதோ நமக்குள் வந்து எங்கேயோ கண்ணுக்குத் தெரியாத திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் பேர் தெரியாத தேவதைகளை நினைவூட்டுவார்கள். பரியனுக்கு புத்தி சொல்லி அனுப்பி வைக்கிற சட்டக் கல்லூரி பேராசிரியர் தோள்களைத் தட்டி நம்பிக்கையூட்டுவார். ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் குறியீடாக வரும் “மேஸ்த்திரி தாத்தா”வின் வாழ்க்கை முறையும், அவரது முடிவும் உறையச் செய்யும்.
நீங்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளச் சொல்வான் இந்த பரியேறும் பெருமாள். “நீ யாரையாவது அடக்கி ஒடுக்கி இருக்கியா?, இனி அப்படி செய்யாத!”, “நீ யாருக்காவது பயந்து ஒடுங்கி உன் சுயமரியாதையை, படிப்பை தூக்கி வீசி இருக்கியா?, இனி அப்படி இருக்காத!” என்பதை இரு தரப்பிற்கும் நெற்றிப் பொட்டில் வலிக்காமல் அடித்துச் சொல்கிறான் இந்த பரியேறும் பெருமாள்.
“எங்கப்பா செருப்பு தைக்கிறவர். பீ திங்கிற பன்னி மாதிரி பார்த்தானுவ என்னை, வைராக்கியமா பேய் மாதிரி படிச்சேன். அன்னிக்கு என்னை அழிக்கணும்னு நினைச்சவனுங்க இன்னிக்கு கைகட்டி அய்யா சாமினு கும்பிடுறாங்க” என்று பூ ராமு பேசும்போது கல்வி ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எந்தளவிற்கு முக்கியமானது என்பதையும், கல்வி என்ன தரும் என்பதையும் அழுத்தம் திருத்தமான செய்தியாக நமக்குள் கடத்துகிறார்.
“இவனை அடிக்குறவனுங்களை உங்களால தடுக்க முடியுமா?”
“முடியாது சார்”..
“அப்புறம் இவனை மட்டும் ஏன் தடுக்கனும்னு நினைக்கிறீங்க?.. யாருக்கும் தெரியாம கதவை சாத்திட்டு தொங்குறதுக்கு, சண்ட போட்டு செத்துப் போகட்டும்” – இப்படி ரோகித் வெமூலாவிற்கும், முத்துக் கிருஷ்ணனுக்கும் சொல்வதற்கு ஒரு பேராசிரியர் இருந்திருந்தால், இன்னேரம் இந்த நிலத்தில் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டேனும் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.
ரயில் தண்டவாளங்களில், நதியில், மரக்கிளையில், மலக்குழியில் பிணங்களாக கண்டெடுக்கப்பட்ட ஏராளமான ஒடுக்கப்பட்ட மக்களின் வலி பேசும் இந்த சினிமா, ஜோவின் தூய்மையான அன்பினாலும், ஆனந்தின் (யோகி பாபு) உறுதியான நட்பினாலும் வெகு மக்கள் ரசிக்கக் கூடியதாக வண்ணம் பெற்றிருக்கிறது. பிரச்சார நெடி இல்லாமல், உள்ளதை உள்ளபடியே இயல்பாய் எடுத்து வைத்திருக்கும் பரியேறும் பெருமாள் வணிக சினிமாவிற்கான இலக்கணத்தை உடைத்து தகர்ந்தெரிந்து, புதிய பாதையை போட்டிருக்கிறது.
இறுதியாக ஜோவின் தந்தையிடம் பரியன் இப்படி சொல்வான், “நீங்க நீங்களா இருக்க வரைக்கும், நான் நாயாதான் இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்க எதுவுமே மாறப் போறதில்ல சார்!” என்று. இந்த வசனம் ஆதிக்க ஜாதியாய் தங்களை கற்பனை செய்துகொண்டு வாழ்ந்து வருகிற ஒவ்வொருவரின் மனிதத் தன்மையை அசைத்துப் பார்க்கும் நிச்சயமாக.
இயக்குநர் பா.இரஞ்சித் முன்னெடுத்திருக்கும் அரசியல் பயணத்தில், வலிமையான வழித்துணையாக கைகோர்த்திருக்கிறார் புதியவர் மாரி செல்வராஜ். கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் இவர்களது இயக்கம் இந்த சமூகத்தில் பல உடைப்புகளை உண்டாக்கும்.
கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரி முத்து, “கராத்தே” வெங்கடேசன், தங்கராஜ் என அத்தனை பேரும் நாமாகவோ அல்லது நாம் எங்கேயோ சந்தித்தவர்களாகவோ மாறியிருக்கிறார்கள். எந்த சினிமாத் தனமும் இல்லாத இவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் இறங்கி, முழுவதுமாய் நிறைந்து அகல மறுக்கிறார்கள்.
மாரி செல்வராஜின் தோளோடு தோளாய் நின்று ரத்தமும் சதையும் சேர்ந்த ஒரு உயிராக பரியேறும் பெருமாளை நம் கண்முண்ணே நிறுத்தியதில் முதல் பங்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரைச் சேரும். திருநெல்வேலியை இதற்கு முன் யாரும் இத்தனை இயல்பாக படம் பிடித்ததே இல்லை என்பதை அடித்து ஆணித்தரமாக சொல்ல வைத்திருக்கிறது அவரது உழைப்பு. இரண்டாமவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அழ வைக்க வேண்டுமா?, அழ வைக்கிறார். நெகிழ வைக்க வேண்டுமா?, நெகிழ வைக்கிறார். பயமுறுத்த வேண்டுமா?, பயமுறுத்துகிறார். அவருடைய திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம் இது. “கருப்பி என் கருப்பி”, “நான் யார்?”, “எங்கும் புகழ் துவங்க”, “வா ரயில் விட போலாமா” எல்லாமே படத்தின் ஜீவன்.
இத்தனை நாள் நாம் காணக் காத்திருந்த கருப்பிக்கு படத்தில் ஏற்படும் முடிவு, இதயத்தை சுக்கு நூறாக உடைக்கிறது. கருப்பியும், பரியேறும் பெருமாளும் இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும், அதன் கள்ள மௌனத்தையும் கேள்வி எழுப்பி போயிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகாலமாக தொடரும் இந்த ஜாதிய அவலங்களை இந்த ஒரேயொரு பரியேறும் பெருமாள் வந்து தகர்த்து விடுவானா? என்றால், விடையில்லை தான். ஆனால் பரியேறும் பெருமாள் எழுப்பியிருக்கும் விவாதமும், உரையாடல்களும் தீர்வினை நோக்கி நிச்சயமாய் நம்மை நகர்த்தும்.