இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அப்பாவிகள், அல்லது சூழ்ச்சியாளர்கள்!

இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறியவர்களுக்கே நியாயமாக படும் ஒரு சூழ்ச்சி பரப்புரை. இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசி வருபவர்கள் இரண்டு வகைப் படுவர், ஒன்று தெரிந்தே இட ஒதுக்கீட்டு முறை கூடாது என சொல்பவர்கள். மற்றவர் இந்த பரப்புரைகளை நம்பி “நியாயம் தானோ?” என வரலாறு, சிஸ்டம் தெரியாத அப்பாவிகள்.

இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இதே கேள்வியை நான் கொஞ்சம் மாற்றி கேட்கிறேன். Reservation இல்லாமல், ஜெனரலில் படித்து, நல்ல மதிப்பெண் எடுத்து, மேற்படிப்பும் ஜெனரலில் கிடைத்து படித்து, மருத்துவ Practice செய்யாமல், படித்து முடித்து நேராக ஆபரேஷன் அறைக்கு வருகிற ஒரு டாக்டர், “நான் படித்து முடித்து நேரடியாக செய்யும் முதல் இதய அறுவை சிகிச்சை இது தான்” என சொன்னால், நீங்கள் மயக்க மருந்து செலுத்திக் கொள்ள தயாராக இருப்பீர்களா?

மருத்துவம் என்றில்லை, எந்த துறையிலும் பயிற்சி முக்கியம், மதிப்பெண் கட் ஆப் என்பது இருக்கும் போட்டியை வடிகட்ட செய்வதற்கு மட்டுமே. படித்து முடித்து இதில் சிறப்பாக பணியாற்ற முடிகிறவர்களால் மட்டுமே அந்தந்த துறையில் சாதிக்க முடிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் மதிப்பெண்கள் மண்ணுக்கு உரமாக கூட பயன்படாது.

பத்தாம் வகுப்பில் 98 %, பன்னிரெண்டாம் வகுப்பில் 95 %, கல்லூரியில் 95 % என சதவிகிதம் வைத்திருப்பவர்கள், அவர்கள் தம் துறையில் எத்தனை பேர் எந்த வகையில் சாதித்து விட்டார்கள்? 65 % , 70 plus percentage வைத்திருக்கிற கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஒருவர் Software Coding ல் பிரித்து மேய்கிறவர் உண்டு. இதே சதவிகிதத்தில் UG மருத்துவம் முடித்தவர்கள் நுழைவுத்தேர்வு, இந்திய துறை சார்ந்த துறை நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டு முக்கிய இடங்களுக்கு சென்றவர்களும் உண்டு, அதிக மதிப்பெண்கள் வைத்து வியாபாரமாகாதவர் அனைத்து துறையிலும் உண்டு.

இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக பின்தங்கியவரை முன்னேற்றி விடுவதற்காக அல்ல, இன்னார் படிக்கக் கூடாது என கல்வி முழுமையாக மறுக்கப்பட்டு காலம் காலமாக கூலியாக மட்டுமே இருக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக புத்தக வாசம் படாதபடி பார்த்துக்கொண்ட இனத்திற்கு, எந்த படிநிலை அமைப்புபடி, எந்த Varnas Systemபடி ஒதுக்கி வைக்கப்பட்டனரோ, அந்த படிநிலையின், அந்த Varnas முக்கோணத்தின் Reverse Version தான் Indian Reservation System. இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை.

என் முப்பாட்டன் ஜட்ஜு, என் பாட்டன் ஜில்லா கலெக்டர், என் தாத்தா வக்கீல், என் அப்பா ஐ.ஜி, நான் என தொடர்கிற வம்சத்தில் வந்தவர்கள் தான், ‘இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்ட இனம், வெறும் அறுபது வருட இட ஒதுக்கீட்டில் முன்னேறி விட்டார்கள். ஆகையால் அது பறிக்கப்பட வேண்டும்’ என பிதற்றிக்கொண்டு இருகிறார்கள். முதல் தலைமுறை தான் இடஒதுக்கீட்டில் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் சொற்ப சதவீதம். இரண்டாம் தலைமுறை கூட இன்னும் தலையெடுக்கவில்லை.

மரபு பரிமாற்றம், கற்றவர் நிறைந்த சூழலில் வளரும் பிள்ளையென காலம் காலமாக கல்வியில் கோலோச்சிய தலைமுறையினர், ஓலைக் குடிசையில் இருந்து ஒருவன், வங்கியில் லோன் மூலம் ஒரு வீடு கட்டி தன்னை முன்னேறியவனாக காட்டிக்கொள்ள சிறு முயற்சி எடுப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் தான் “இன்னைக்கு எல்லாருமே வளர்ந்துட்டான்” என, இந்த இட ஒதுக்கீட்டு முறையை மனசாட்சி இல்லாமல் எதிர்க்கிறார்கள்.

அறுபது, எழுபது வருடத்திற்கு முன்னே வெறும் 3% இருந்த பார்ப்பனர்கள், எல்லா துறையிலும் 70-80% ஆதிக்கம் பெற்று இருந்தனர். இன்றைய இந்த சதவிகித சரிவு, இட ஒதுக்கீட்டு முறை இல்லாமல் சாத்தியம் ஆகி இருக்காது. அறிவையும் தாண்டி பிழைப்பதற்கான சாமர்த்திய முறைகளை உள்ளடக்கிய இந்த கல்வி முறையில், ஒருவரை முதல்படி தூக்கிவிட தான் இந்த இட ஒதுக்கீடு கை கொடுக்கிறதே ஒழிய, பார்ப்பனியத்தின் சூட்சமத்தை அறிந்து, அதை வீழ்த்தி முன்னேற இன்னமும் தயாராகாமல் இருக்கிறார்கள். தாழ்த்தபட்டவர் என்றில்லை, பிற்படுத்தப்பட்ட இனத்தவரையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

இந்தியாவின் முக்கிய துறையான ஒரு அரசு அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற ஒரு இயக்குனர் அவர் அமரப் போகும் அறையை யாகம் செய்து, சுத்தப்படுத்தி பொறுபேற்றுக் கொள்கிறார். காரணம், அதற்கு முன் அந்த அலுவலுகத்தில் இருந்து இட மாற்றம் ஆனது ஒரு தலித் அதிகாரி. அரசு அலுவலகங்களில் எங்கும் நிறைந்து இருக்கும் இந்த சாதிய அடக்குமுறையை, அரசு இயந்திரத்தை பற்றி துளியும் அறிமுகமில்லாமல், சமூக நிகழ்வுகளை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமில்லாத ‘யோ யோ’ Corporate கலாச்சாரத்தில் வளர்ந்து, நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் பேசும் ஷங்கர் படத்தின் தலைமுறையினர், தலை கால் புரியாமல் இட ஒதுக்கீட்டு முறையை எதிர்க்கிறார்கள். இந்த அரைகுறை சமூக பார்வை கொண்ட உணர்ச்சி மிக்க இளைஞர்கள் தான், சமூகத்தில் சூழ்ச்சி அரசியல் செய்பவர்களின் இலக்கு

இந்திய சமூகத்தில் பூரண இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்கள் முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் மற்றும் சாதி பெருமை பேசும் ஆதிக்க சிந்தனையுடையவர் தான். இவர்கள் எதிர்க்கும் இட ஒதுக்கீட்டு முறையில், ஏன் Merit ல் வந்தால் கூட முழுமையான சமூக அந்தஸ்தை இட ஒதுக்கீடு பெற்று முன்னேறியவர்கள் அனுபவிப்பதில்லை என்பதே உண்மை. சமூக இழிவை பொருளாதார ரீதியான முன்னேற்றத்தால் ‘நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை’ என கொஞ்சம் மனதை நிராகரிப்புகளுக்கிடையில் சமதானப்படுத்திக் கொள்கிறார்கள், அவ்வளவே.

பொருளாதார ரீதியான ஏற்ற தாழ்வு இந்தியாவில் எந்த மனிதனுக்கும் சாத்தியம், யாரும் முன்னேறலாம், யாரும் வாழலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஒருவரை நிலை குலைய செய்வதென்பது எல்லா மனிதரும் அனுபவிக்க முடியாதது, அதற்கு தலித்தாக பிறப்பெடுத்து வர வேண்டும். தனக்கு சாதிய மனபான்மை இல்லை என்று நினைப்பவர்கள் கூட, பாதிக்கப்படும் தலித்துகளுக்கு பாவப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்புவதில்லை.

இட ஒதுக்கீடு என்றாவது ஒரு நாள் அழிய வேண்டியது தான். யாரும் யாருக்கும் சமமானவர்கள். யாருக்கும் பிரத்தியேக முக்கியவத்துவம் கொடுப்பது சமூக அமைப்பில் இருக்க கூடாத ஒன்று தான். ஆனால் அதை கோரும் தார்மீக உரிமையை, நிர்பந்திக்கும் யோக்கியதையை சமூகம் இன்னும் பெற்றிட வில்லை. அது நடந்தால் பார்க்கலாம் என கொஞ்சம் திமிராகவே சொல்லலாம், திமிரோடு இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்பவருக்கு.

ஆயிரம் அடி தோண்டிய பள்ளத்தை வெறும் 60 அடி தோண்டிய இன்னொரு பள்ளத்தின் மண்ணால் மூடி விடலாம் என்கிற லாஜிக் பேசுபவர்கள் ஒன்று ஏதுமறியாதவர்கள், இல்லை அப்பாவிகளை சூழ்ச்சியில் தள்ளும் சூனியக்காரர்கள்.

ஆகையால், இட ஒதுக்கீடு என்பது சலுகையோ, பொருளாதாரத்துக்கான நிவாரணமோ அல்ல, உரிமை.

வாசுகி பாஸ்கர்

(டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று)

0a1h