பிராமண ஆன்மீக முறையை பின்பற்றும் ஒருவர் இயேசு பற்றி பேசுவது வெறுப்பு அரசியல்!

“ரமணர் மாதக்கணக்கில் சாப்பிடாமல் பாதாள லிங்கத்தின் அருகில் தவமிருந்தார். பூச்சிகள், புழுக்கள் எல்லாம் அவர் உடம்பை தின்றுகொண்டு இருந்தன. அப்படியும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. பின்னர் ஆசிரமத்தில் இருந்தபோது அவருக்கு கான்சர் வந்தது. அனஸ்தீஷியா இல்லாமலே டாக்டரை அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார். டாக்டர் அறுத்தபோது சிரித்துக்கொண்டே இருந்தார்…”

இப்படி எல்லாம் ரமணர் பற்றிக் கூட கதைகள் உலவுகின்றன. இந்த கான்சர் விஷயம் இளையராஜாவின் ரமணர் பாடல் ஒன்றிலேயே கூட வரும். இவற்றைக் கூட ஆராய ஒருவர் புறப்பட்டால் இவை எல்லாம் கட்டுக் கதைகள் என்று நிரூபணமாகலாம். அதற்குப் பிறகும் அவரது பக்தர்கள் அதனை தொடர்ந்து நம்பி அவரை வழிபடலாம்.

அது போலவே இயேசு என்று ஒருவர் பிறந்து வாழ்ந்தாரா, அவர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார் போன்றவற்றை வரலாற்று அறிஞர்களோ அல்லது அகழ்வாராய்ச்சி நிபுணர்களோ வேண்டுமானால் ஆராயப் போகலாம். நம்பிக்கையாளர்களுக்கு அது தேவையற்ற சமாச்சாரம்.

கிறித்துவ குடும்பத்தில் பிறந்து, ஆனால் இந்து நம்பிக்கைகளை, அதுவும் பிராமண ஆன்மீக முறையை, பின்பற்றும் ஒருவர் பேச முனைவது வெறுப்பு அரசியலாகவே எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் இயேசு விஷயத்தில் வரலாற்று ஆதாரம் தேவைப்பட்ட அவருக்கு ரமணரின் ‘உயிர்த்தெழுதல்’ விஷயத்தில் தேவைப்படவில்லை. ஒருவேளை யூடியூபில் ரமணர் பற்றி எந்த டாகுமெண்டரியும் இல்லை என்பதால் அவர் மட்டும் உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்று நம்பி விட்டார் போல.

தான் இசையில் மட்டுமே ஞானி, மற்ற விஷயங்களில் அல்ல என்பதை மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார். அவ்வளவுதான்.

SRIDHAR SUBRAMANIAM