பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்

தனது ஊரில் கோவில் இல்லாததால் உதயநிதி ஸ்டாலின் ஊரில் உள்ள கோவிலில் பார்த்திபன் தனது மகள் நிவேதா பெத்துராஜுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நேரம் பார்த்து உதயநிதி ஊரில் ஒருவர் உயிரிழந்ததால், காது குத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் பார்த்திபனையும் அந்த ஊரில் இருந்து விரட்டி விடுகின்றனர்.

இதனால் கடுப்பாகும் பார்த்திபன், உதயநிதி ஊரில் உள்ளவர்களை காலி செய்ய முடிவு செய்கிறார். அதாவது அவர்களை கொல்லாமல், அந்த ஊரில் இருந்து விரட்ட முடிவு செய்கிறார். அதன்படி பலருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கிக் கொடுத்து அவர்களை அங்கேயே இருக்கும்படி செய்துவிடுகிறார். இதனால் உதயநிதியின் ஊரில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடுகிறது. இந்நிலையில், பெரியவனாகும் உதயநிதிக்கு வெளியூர், வெளிநாடு செல்ல விருப்பமில்லை.

மேலும் தனது ஊருக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். உதயநிதியின் ஊர் மக்கள் தங்களது மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பக்கத்து ஊருக்கு தான் போக வேண்டி இருக்கிறது. இந்நிலையில், தனது ஊருக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் உதயநிதி அதற்கான வழியை யோசிக்கிறார். இந்நிலையில், பார்த்திபனின் தங்கையை திருமணம் செய்து கொண்ட நமோ நாராயணாவின் ஊருக்கு தேவையான உதவிகளை பார்த்திபன் செய்து கொடுக்கிறார்.

இதைப் பார்த்த உதயநிதிக்கு ஒரு யோசனை வருகிறது. தனது தங்கை ஊருக்கே இந்த உதவிகளை செய்யும் பார்த்திபன், அவரது மகளுக்காக என்னென்ன உதவிகளை செய்வார் என்று யோசிக்கிறார். மேலும் பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை தேடிப்பிடித்து காதலிக்கவும் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நிவேதா பெத்துராஜும் உதயநிதியை காதலிக்க தொடங்குகிறார்.

பொதுவாகவே புகழ்ச்சியை விரும்பும் பார்த்திபனுக்கு வேறு யாருக்காவது புகழ்ச்சி சென்றால் அது பிடிக்காது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து அந்த ஊரில் பிரபலமாகும் உதயநிதியை ஊரை விட்டே காலி செய்ய வேண்டும் என்று பார்த்திபன் முடிவு செய்கிறார். அதற்கான முயற்சியில் இறங்கும் போது உதயநிதி தனது மகளை காதலிப்பதும் தெரிய வருகிறது.

இந்நிலையில், பார்த்திபன் தான் தனது ஊர் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து மக்கள்தொகையை குறைக்கிறார் என்ற உண்மையும் உதயநிதிக்கு தெரிய வர, உதயநிதி பார்த்திபனின் திட்டத்தை எப்படி முறியடித்தார்? பார்த்திபனின் மகள் நிவேதா பெத்துராஜுடன் இணைந்தாரா? அதற்கு பார்த்திபன் தடையாக இருந்தாரா? கடைசியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் முறையாக கிராமத்துப் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனது ஊருக்கு தேவையானதை செய்யும் கிராமத்து இளைஞனாக, அவருக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. குறிப்பாக பார்த்திபனுடனான அவரது காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. கிராமத்து பெண்ணாக நிவேதா பெத்துராஜின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.

பார்த்திபன் தனக்கே உண்டான நக்கலுடன் கொஞ்சம் வில்லத்தனத்தையும் சேர்த்து ரசிக்க வைக்கிறார். பார்த்திபனின் கதாபாத்திரம் படத்திற்கே பலமாக இருக்கிறது. பார்திபனுடனே டிரைவராக வரும் மயில்சாமி படம் முழுக்க வந்து அவருக்குண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். உதயநிதி நண்பனாக வரும் சூரி படம் முழுக்க கலகலப்புக்கு பஞ்சம் வைக்காமல் ரசிக்க வைக்கிறார். சூரி, பார்த்திபன் இடையேயான பேச்சுகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணா தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

ஊரை நேசிக்கும் ஒரு இளைஞன், தனது ஊரில் உள்ள அனைவரையும் காலி செய்ய சபதம் எடுக்கும் ஒருவரிடம் இருந்து தனது ஊரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை கிராமத்து பின்னணியில் காமெடி கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார் தளபதி பிரபு. குறிப்பாக பார்த்திபனின் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மயில்சாமியும் அவருடன் சேர்ந்து போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது.

டி.இமானின் இசையில் பாடல்கள் கிராமத்து சாயலில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பின்னணி இசையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். கே.டி.பாலசுப்ரமணியமின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. கிராமத்து வயல்வெளிகளை வளமாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் `பொதுவாக எம்மனசு தங்கம்’ கிராமத்தின் சிங்கம்.