பட்டத்து அரசன் – விமர்சனம்

நடிப்பு: அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.குமார், பாலசரவணன், சத்ரு, ரவிகாளே, ராஜ் அய்யப்பன் மற்றும் பலர்

இயக்கம்: சற்குணம்

ஒளிப்பதிவு: லோகநாதன் சீனிவாசன்

 இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா

கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பல வந்துள்ள போதிலும், ‘ஒரு கூட்டுக்குடும்பத்தின் அவப்பெயரைத் துடைப்பதற்கும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கும் கபடி விளையாட்டு காரணமாக இருக்கிறது’ என்ற புதுமையான கதைக்கருவுடன் வெளிவந்திருக்கிறது ‘பட்டத்து அரசன்’.

தஞ்சை மாவட்டம் காளையார் கோயில் கிராமத்தில் வெற்றிலை விவசாயம் செய்யும் ராஜ்கிரண், கபடி விளையாட்டிலும், அவ்விளையாட்டை பயிற்றுவிப்பதிலும் வீராதி வீரராக புகழ்பெற்றுத் திகழ்கிறார். அவருக்கு சிலை வைத்து ஊர் மக்கள் மரியாதை செய்கிறார்கள்.

கூட்டுக்குடும்பத் தகராறில் ராஜ்கிரணின் மருமகள் ராதிகா சரத்குமாரும், பேரன் அதர்வாவும் பிரிந்துசென்று தனியே வசித்து வருகிறார்கள். என்றாலும், பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க அதர்வா முயன்று வருகிறார்.

ராஜ்கிரணின் இன்னொரு பேரனான ராஜ் அய்யப்பன் கபடி விளையாட்டு வீரர். அவர் எதிர் அணியிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் ஊர் அணியை தோற்க வைத்துவிட்டதாக ராஜ்கிரணின் எதிரியான ரவிகாளே குடும்பம் பழி சுமத்துகிறது. ஊர் பஞ்சாயத்து கூடி, ராஜ்கிரண் குடும்பம் இனிமேல் கபடி விளையாடக் கூடாது என்று ஒதுக்கி வைக்கிறது. பழியை தாங்க முடியாத ராஜ் அய்யப்பன் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் நிலைகுலைந்து போகிறது ராஜ்கிரண் குடும்பம்.

ராஜ்கிரணின் பேரனான அதர்வா, தன் தாத்தா குடும்பத்துக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்கவும், ராஜ் அய்யப்பன் நிரபராதி என்று நிரூபிக்கவும், அவரது மரணத்துக்குப் பின்னால் உள்ள சதியை அம்பலப்படுத்தவும் களத்தில் குதிக்கிறார். அதர்வாவின் முயற்சிக்கு பலன் கிடைத்ததா, இல்லையா என்பதை குடும்பப் பாசமும், அதிரடி ஆக்சனும் கலந்து சொல்லுகிறது ‘பட்டத்து இளவரசன்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

நாயகனாக வரும் அதர்வா கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். தன் மீது வெறுப்பை உமிழும் குடும்பத்தினர் மீது பாசம் காட்டுவது, எதிரிகளுடன் துடிப்பாக சண்டை போடுவது, நாயகியுடன் ரசனையாக காதலிப்பது என அனைத்து விஷயங்களிலும் அதர்வாவின் நடிப்பு அபாரமாக உள்ளது.

கபடி வீரர், கூட்டுக்குடும்பத் தலைவர் என பல பரிணாமங்களில் ராஜ் கிரண் கலக்கி இருக்கிறார். இளைஞர்களுக்கு இணையாக கபடி விளையாடும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். தனது நடை, உடை, பாவனை மூலமே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் ஆஷிகா ரங்கநாத்துக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிங்கம்புலியும், பாலசரவணனும் வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கிறார்கள்.

ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.குமார், சத்ரு, ரவிகாளே, ராஜ் அய்யப்பன் என அனைவருமே தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளையும், குடும்பப் பகையையும் கபடி விளையாட்டுடன் இணைத்து, கிராமிய மண் வாசனையோடு திரைக்கதை அமைத்து, படத்தை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். அலுப்பூட்டும் பழமையான காட்சியமைப்புகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவுக்கருவி வெற்றிலைத் தோட்டம், தஞ்சை கிராம அழகு, அதிரடியான கபடி விளையாட்டு என அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறது.

 ஜிப்ரான் இசையில் “ஏகப்பட்ட மேகம்”, ”அஞ்சனத்தி” ஆகிய பாடல்கள் அருமை. பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

‘பட்டத்து அரசன்’ – குடும்பப் பாங்கான கில்லி! குடும்பத்துடன் பார்க்கலாம்!