7/ஜி – விமர்சனம்

நடிப்பு: சோனியா அகர்வால், ஸ்முருதி வெங்கட், ரோஷன் பஷீர், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்பிரமணியம் சிவா, கல்கிராஜா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஹாரூன்

ஒளிப்பதிவு: கண்ணா

படத்தொகுப்பு: பிஜு வி.டான் பாஸ்கோ

இசை: சித்தார்த் விபின்

தயாரிப்பு: ‘ட்ரீம் ஹவுஸ்’ ஹாரூன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

2004ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்து வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் ‘7G ரெயின்போ காலனி’. அந்த செண்ட்டிமெண்ட் காரணமாகவோ, என்னவோ, இந்த படத்துக்கு ‘7/G’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். என்றாலும், இவ்விரு படங்களின் கதைகளும் முற்றிலும் வேறானவை. முந்தைய படத்தில்  காதலியாக வந்து கசிந்துருக வைத்த சோனியா அகர்வால், இந்த படத்தில் பேயாக வந்து பயமுறுத்தியிருக்கிறார்…

ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ரோஷன் பஷீர். அவரது மனைவி ஸ்மிருதி வெங்கட். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஃபிளாட் ஒன்றை வாங்கி குடியேறுகிறார்கள். அந்த ஃபிளாட்டின் கதவு எண் தான் 7/G.

எளிமையான முறையில் புதுமனை புகுவிழா கொண்டாடுகிறார்கள். ஆட்டம், பாட்டம், கலகலப்பு என்றிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு, ரோஷன் பஷீருடன் பணிபுரியும் அலுவலக நண்பர்கள், நண்பிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சினேகா குப்தா. இவர் பஷீரை, அவர் ஸ்மிருதி வெங்கட்டை திருமணம் செய்வதற்கு முன்பிருந்தே ஒருதலையாய் காதலித்து வருபவர். பஷீர் திருமணமான பிறகும் ‘உன்னை வசப்படுத்தாமல் விட மாட்டேன்’ என்று வைராக்கியமாக முயன்று கொண்டிருப்பவர். பில்லி, சூனியம் போன்ற பிளாக் மேஜிக்கில் மிகுந்த நம்பிக்கை கொண்ட சினேகா குப்தா, பஷீர் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்திருக்கும்போது, சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறிய சூன்ய பொம்மையை ரகசியமாகக் கொண்டு வந்து, யாருக்கும் தெரியாமல் பஷீர் வீட்டு லாஃப்டரில் ஒளித்து வைத்துவிடுகிறார்.

இதைத் தொடர்ந்து, அலுவலகப் பணி நிமித்தம் பஷீர் பெங்களூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. திரும்பி வர இரண்டு வாரம் ஆகும் என்று சொல்லிவிட்டு, அவர் பெங்களூர் புறப்பட்டுச் சென்று விடுகிறார். இதன்பின், வீட்டில் மகனுடன் தனியாக இருக்கும் ஸ்மிருதி வெங்கட், அச்சமூட்டும் பலவகை அமானுஷ்யங்களை எதிர்கொள்கிறார். வீட்டில் தங்களுடன் வேறு யாரோ இருப்பதாக உணர்ந்து பீதியடைகிறார்.

ஒரு கட்டத்தில், ஆவியாக இருக்கும் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் முன் தோன்றுகிறார். “இது என் வீடு. வீட்டை விட்டு வெளியேறு” என்று கொடூரமான குரலில் சொல்லி பயமுறுத்துகிறார். ஸ்மிருதி வெங்கட்டுக்கு பயமாக இருந்தாலும், “நான் ஆசை ஆசையாய் வாங்கிய வீடு இது. என் வீடு. இதைவிட்டு போக மாட்டேன்” என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

இதனால் சோனியா அகர்வால் ஆவி, ஸ்மிருதி வெங்கட்டையும், அவரது மகனையும் துன்புறுத்தி கொடுமைப்படுத்துகிறது. இதற்கு எதிராக தீரமாக போராடுகிறார் ஸ்மிருதி வெங்கட். அதில் அவர் வெற்றி பெற்றாரா? தன்னையும், தன் மகனையும் காப்பாற்றினாரா? அல்லது அவர்களை வீட்டைவிட்டு விரட்ட முயலும் சோனியா அகர்வால் ஆவி, தான் நினைத்ததை சாதித்துக்கொண்டதா? சோனியா அகர்வால் யார்? அவர் உயிருடன் இந்த வீட்டில் வாழ்ந்தபோது என்ன நடந்தது? இப்போது ஆவியாக இருக்கும் அவர் விரும்புவது என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘7/G’ திரைப்படத்தின் மீதிக்கதை.

பிரதானமாக மூன்று பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட இப்படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்திருக்கிறார். உயிரோடு இருக்கும்போது அழிக்க முடியாத வில்லன்களை ஆவியாக வந்து தீர்த்துக்கட்டுவது போன்ற வழக்கமான கதாபாத்திரம் போல் இருந்தாலும், இது ‘செண்டிமெண்ட் ஆவி’யாக வித்தியாசமாக படைக்கப்பட்டிருப்பதால், அதை நன்கு உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் உயிரிழக்கும் காட்சியில் பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்துவிடுகிறார்.

நாயகனின் மனைவியாக, குடும்பப் பாங்காக இரண்டாவது முக்கிய பெண் கதாபாத்திரத்தில், ஸ்முருதி வெங்கட் நடித்திருக்கிறார். காதல், பாசம், தாய்மை, பயம், தைரியம் ஆகிய சகல உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, பொருத்தமான உணர்வுகளை துல்லியமாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகனின் அலுவலகத் தோழியாக, அவரை ஒருதலையாக காதலிப்பவராக மூன்றாவது முக்கிய பெண் கதாபாத்திரத்தில் சினேகா குப்தா நடித்திருக்கிறார். கொஞ்சம் கிளாமராக அசத்துபவராகவும், பில்லி, சூனியம், மாயம், மந்திரம் என்று நிறையவே மிரட்டுபவராகவும் வந்து தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார். மனைவியுடன் ஒரு பாட்டு, அலுவலகத் தோழியுடன் ஒரு பாட்டு என்று ஜமாய்த்திருக்கிறார்.

சித்தார்த் விபின் காமெடியாய் வசனம் பேசும் வில்லனாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரராக வரும் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா கவனம் ஈர்க்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்கி, தயாரித்திருக்கிறார் ஹாரூண். வழக்கமான அமானுஷ்யக் கதையில் பிளாக் மேஜிக், பேய் செண்டிமெண்ட் போன்ற அம்சங்களைப் புகுத்தி, திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டு விடாதவாறு படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதில் கவனமாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் கண்ணாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

‘7/G’ – அமானுஷ்ய திகில் கதை விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்!