தயாரிப்பாளர் மதன் மாயம்: மோசடி வழக்கில் பாரிவேந்தர் கைது!

திரைப்பட தயாரிப்பாளர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மீது மோசடி செய்ததாக சட்டப்பிரிவு 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கை மோசடி செய்ததாக ஐபிசி 406 மற்றும் ஐபிசி 34 ஆகிய பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் பாரிவேந்தர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மதனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன்பேரில், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

மதன் மாயமான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், ‘எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 111 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை ஏன் விசாரிக்கக் கூடாது?’ என்று அண்மையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘பாரிவேந்தரிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்று கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பாரிவேந்தருக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (பழைய கமிஷனர் அலுவலகம்) நேற்று மாலை பாரிவேந்தர் வந்தார். அவரிடம் போலீஸார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

மேலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து, மதனின் நண்பர் ரங்கபாஷ்யம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அலுவலர் சண்முகம் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகவேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.