மேகேதாட்டு அணை விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு நிதின் கட்கரி திடீர் அழைப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கைக்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய மோடி அரசு செயல்படுவதற்கு அதிமுக, திமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இவ்விரு கட்சி எம்.பி.க்களும் கடந்த ஒரு வாரமாக கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு உள்ளிட்டோரைச் சந்தித்தார். அதன்பின் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது மேகேதாட்டு அணை வரைவு செயல்திட்டத்துக்கு அனுமதி வழங்கியதற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் கர்நாடக முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”மேகேதாட்டு அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சினையைத் தீர்க்க, இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டு விரைவில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ஆதலால், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் இந்தக் கூட்டம் இருக்கும் என்று நம்புகிறேன். நீதிமன்றத்தில் சென்று இந்தப் பிரச்சினையில் தீர்வு காண்பதைக் காட்டிலும் சுமுகமாகப் பேசித் தீர்வு காணலாம் என்று தமிழகத்துக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

நீதிமன்றத்துக்குச் சென்றால், தொடர்ந்து வழக்கு நடக்கும். சட்டரீதியாகத் தீர்வு காண முடியாது. சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். இந்த விஷயத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்ற குமாரசாமியின் கோரிக்கையை ஏற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த வருமாறு அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான தமிழக அரசின் ஒப்புதலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பெறுவதற்கு மத்திய மோடி அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கான வேலைகள் டெல்லியில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிந்து தமிழக நலனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், அவர் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.