முதல் பார்வை: பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’) என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். தலித்துகளாக பிறந்ததை தவிர வேறு ஒரு தவறும் செய்யாத ஒரு தலித் கிராம அப்பாவி மக்கள், ஆதிக்க சாதியினரால் கடந்த 6 ஆண்டுகளாக சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை பதிவு செய்திருக்கும் ஆவணப்படம் இது.

“என் நாட்டில் தினம் தினம் நடக்கும் இப்படிப்பட்ட கொடுமைகளை பார்த்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு  மட்டுமே நான் இருக்கிறேனே” என்ற குற்ற உணர்ச்சி, இதயத்தின் உள்ளே ஆயிரமாயிரம் புழுக்களாய் நெளிவதை சகித்துக்கொண்டு தான் இந்த ஆவணப்படத்தை பார்க்க முடிந்த்து.

இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே உள்ள ஹரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில், மிர்ச்புர் என்கிற தலித்துகளின் கிராமத்து தெருவில், ஆதிக்கசாதி என்று குறிப்பிடப்படும் ஜாட் இனத்தைச் சேர்ந்த இருவர் நடந்து சென்றபோது, அங்கே இருந்த ஒரு நாய் அவர்களைப் பார்த்து குரைத்தது என்பதற்காக, அந்த தலித் கிராமத்தை தீக்கிரையாக்கி, அவர்களது உடைமைகளை சூறையாடி, வீடுகளை அடித்து நொறுக்கி, அவர்களை அந்த ஊரைவிட்டே துரத்தி அடித்திருக்கின்றனர் ஜாட்கள். அந்த வன்முறையில் மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணும், அவரது அப்பாவும் ஜாட்டுகள் கொளுத்திய தீயில் பலியானார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது 2010 ஆம் ஆண்டு. ஆனால் இன்று வரை அந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்குள் போக முடியவில்லை. அங்கிருந்து வெளியேறி, வெளியேற்றப்பட்டு, வேத்பால் தன்வர் என்ற சமூக செயல்பாட்டாளரின் பண்ணை இடத்தில் 6 வருடங்களாக, தற்காலிகமாக குடிசைகள் அமைத்து தங்கி இருக்கின்றனர். அவர்களை ஜாட்டுகள் மீண்டும் தாக்க்க் கூடாது என்பதற்காக CRPF காவல்படையை சேர்ந்த 70 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 2 வருடங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது.

40 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், அக்கிராமத்தின் தற்போதைய நிலையை நமக்கு காட்டுகிறது. கலவரத்தோடு தங்களது கிராமங்களைவிட்டு இடம்பெயர்ந்த தலித்துகளின் நிலையை, அவர்களது வாழ்க்கைப் போராட்டத்தை மிகை இல்லாமல் சரியாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்த கலவரத்தோடு தொடரப்பட்ட வழக்கு, அவ்வழக்கினை நடத்தும் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள், அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்பு மறுபடியும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கே மாற்றப்பட்ட விவகாரம் என அது சார்ந்த விவரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.

கலவரத்துக்குப் பின் தலித் குழந்தைகளின் கல்வி, பெண்களின் திருமணம், வேலைவாய்ப்பு, மக்களது வாழ்வியல் சிக்கல்கள், மக்களின் சுகாதாரம், மக்களது பாதுகாப்பு போன்றவறையும் ஆவணப்படுத்த தவறவில்லை.

ஆவணப்படத்தில் இவ்வழக்கு சார்ந்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கேட்கும் கேள்வி நம்து இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. இது போன்ற துணிச்சலான பல்வேறு முயற்சிகள் ஆவணப்படம் முழுதும் காணப்படுகிறது. அனைத்து காட்சிகளும் தலித் மக்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திலும், பழைய மிர்ச்பூர் கிராமத்திலும் எடுக்கப்பட்டிருப்பது ஆவணப்படத்தை தூக்கி நிறுத்துகிறது.

மற்ற ஆவணப்படங்களைப் போல இல்லாமல் தமிழிலேயே சப்டைட்டில் போட்டது மிகப் பெரிய ஆறுதல். சலிப்பு ஏற்படாமல் பார்ப்பதற்கு இந்த தமிழ் சப்டைட்டில் மிகப்பெரிய உதவியாக இருந்தது. மேலும் ஆவணப்படத்தை பாதிக்கப்பட்டவர்களின் நிலை, வழக்கு விவரம் என ஒவ்வொரு பாகங்களாகப் பிரித்து சொல்லியது நல்ல உத்தி.

படம் நெடுகிலும் நல்ல ஒலியமைப்பு ஆவணப்படத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியது. படக்குழுவினர் அனைவருமே நன்றாக வேலை செய்துள்ளனர் என்பதை ஆவணப்படத்தைப் பார்க்கும்பொழுதே தெரிகிறது. இதனை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

“நாங்களும் இந்தியர்கள் தானே? நாங்களும் இந்துக்கள் தானே?” என்று பரிதாபமாக கேட்டு அதை உறுதி செய்ய முடியாத வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் மிர்ச்புர் மக்கள்.

தேவைப்படும்போதெல்லாம், தலித்துகளைப் பற்றி மேடைகளில் செண்டிமென்ட் பிழிகிற காங்கிரஸின் ராகுல் காந்தியும், பாஜகவின் நரேந்திர மோடியும் இந்த மிர்ச்புர் தலித் மக்களுக்காக என்ன செய்திருக்கின்றனர் என்பதையும், என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.