விஜய் டிவி சர்ச்சை: ‘நீயா நானா’வின் “யார் அழகு” நிகழ்ச்சியை ஒளிபரப்ப போலீஸ் தடை!

வாரம்தோறும் ஞாயிறு அன்று விஜய் டிவியில் ‘நீயா நானா’ என்ற விவாத  நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கோபிநாத் நெறியாளுகை செய்யும் இந்நிகழ்ச்சியை இயக்கி தயாரிக்கிறார் ஆண்டனி. இந்நிகழ்ச்சியில் எப்போதாவது சமூக அக்கறையுடன் நல்ல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றாலும், பெரும்பாலான நேரங்களில் பெருநகர இளம் பெண்களையும், ஆண்களையும் கவர்ந்திழுக்கும் வகையில், மறைமுகமாக செக்ஸ் பூச்சு உள்ள தலைப்புகளே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்ற விமர்சனமும் இதன் மீது உண்டு.

இந்நிலையில், இன்றைய ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் “யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தலைப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதற்கு பலதரப்பினரிடமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பெண்ணிய அமைப்பினர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, அழகு தொடர்பான ‘நீயா நானா’ ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்றைய ‘நீயா நானா’ நிகழ்ச்சி நேரத்தில், ஏற்கெனவே ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியே மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.