நாஞ்சில் சம்பத் பதவியை காலி செய்த குணா, பாண்டே!

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘அக்கினி பரீட்சை’ நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆளுங்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

நேற்று காலை ‘புதிய தலைமுறை’ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, “வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே?” என்று நெறியாளர் குணசேகரன் கேட்ட கேள்விக்கு, “சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது?” என்று அலட்சியமாக பதில் சொன்னார் நாஞ்சில் சம்பத்.

இந்நிலையில், நேற்று தந்தி தொலைக்காட்சியின் ‘கேள்விக்கு என்ன பதில்’ நிகழ்ச்சிக்காக, ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளுக்கு, நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்திருந்தார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வந்தது. இதிலும், நாஞ்சில் கூறிய பதில்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

“பெருவெள்ளம் புரட்டிப் போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடத்தப்பட்டது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?” என்று நெறியாளர் பாண்டே கேட்ட கேள்விக்கு நாஞ்சில் சம்பத், “எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா” என்று பதில் சொல்லும் காட்சியும் ப்ரமோவில் காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தந்தி டிவி பேட்டி ஒளிபரப்பாவதற்கு சுமார் 1 மணி நேரத்துக்கு முன்பாகவே நாஞ்சில் சம்பத்தின் கட்சிப் பதவியை பறித்துவிட்டார் ஜெயலலிதா.

தமிழக ஆளுங்கட்சியின் பிரதிநிதியான நாஞ்சில் சம்பத்தை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து, அக்கட்சியின் ஆணவத்தை அம்பலப்படுத்திய ‘புதிய தலைமுறை டிவி’ குணா, ‘தந்தி டிவி’ பாண்டே ஆகியோரின் இந்த பணி சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.