நமது – விமர்சனம்

‘ஸ்கிரீன் பிளே’ என்பார்களே… அந்த திரைக்கதையின் ரசிப்புக்குரிய ஜிம்மிக் அல்லது லாவகமான சித்துவிளையாட்டுக்கு மிகச் சிறந்த சமீபத்திய உதாரணம், இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டியின் ‘நமது’.

சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேனேஜராக வேலை செய்கிறார் சாய்ராம் (மோகன்லால்). பஞ்சர் ஒட்ட இனி இடமே இல்லை என சொல்லும் அளவுக்கு மரணப்படுக்கையில் கிடக்கும் மோட்டார் சைக்கிளின் சக்கர ட்யூபை மாற்ற வக்கில்லாத அளவுக்கு கைக்கும் வாய்க்கும் போதாத சம்பாத்தியம், தனக்கு கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கூட கூசாமல் கடன் கேட்கும் அவலம் என்ற நிலையில் இருக்கும் சாய்ராம், மேனேஜராக புரொமோஷன் பெறுவதற்காக, தனக்கு போட்டியாக இருக்கும் இன்னொரு உதவி மேனேஜரை ஒரு சிறு கிரிமினல் வேலை செய்து ஓரங்கட்டுகிறார். அந்த சிறு கிரிமினல் வேலை விஸ்வரூபம் எடுத்து அவரை எப்படி பாடாய் படுத்துகிறது என்பது ஒரு கதை.

காயத்ரி (கௌதமி) ஒரு ஹவுஸ் ஒய்ஃப். வீட்டுக்குத் தேவையான ஒரு பொருள் ஓரிடத்தில் 100 ரூபாய் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால், 500 ரூபாய் செலவளித்து அந்த இடத்துக்குப் போய் வாங்கிவரும் மனப்பான்மை கொண்ட நடுத்தர வர்க்கத்து ஹவுஸ் ஒஃப். அவருக்கு மிகப் பெரிய சம்பளத்தில் ஒரு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. தன் குடும்பத்தினரை உயிருக்கு உயிராக நேசிக்கும் அவர், அவர்களைப் பிரிந்து வெளிநாடு செல்ல தயங்குகிறார். ஆனால், அவரது கணவரும், மகனும், மகளும் உற்சாகமாக அவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் காயத்ரி தவிப்பது இன்னொரு கதை.

கல்லூரி மாணவர் அபிராம் (விஷ்வாந்த்). பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்த லேப்டாப்-ஐ செண்டிமெண்டாக போற்றி பாதுகாத்துவரும் அவர், தான் ஒருதலையாக காதலிக்கும் பெண் கேட்டார் என்பதற்காக அந்த லேப்டாப்-ஐ விற்று அவருக்கு அதிநவீன செல்போன் வாங்கி பரிசளிக்கிறார். ஒரு கட்டத்தில் அபிராமின் காதலை அந்த பெண் உதாசீனம் செய்துவிட்டு போய்விட, அதை தாங்கிக்கொள்ள முடியாத அபிராம் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுப்பது மற்றொரு கதை.

சிறுமி மஹிதா (ரைனா) பள்ளிக்கூட மாணவி. அவருக்கும், ரோட்டோர குடிசையில் வசிக்கும் 4 வயது ஏழைச் சிறுவனுக்கும் இடையில் தற்செயலாக பழக்கம் ஏற்பட்டு, அது நட்பாய் விரிகிறது. ஒருநாள் அந்த சிறுவன் காணாமல் போய்விடுகிறான். துடித்துப்போகும் மஹிதா, அச்சிறுவனை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்குவது வேறொரு கதை.

இப்படி சாய்ராம் கதை, காயத்ரி கதை, அபிராம் கதை, மஹிதா கதை ஆகிய நான்கு கதைகளும் ஒன்றை ஒன்று உரசாமல், ஓவர்லாப் செய்யாமல், மிக கவனமாக தனித்தனியே சுவாரஸ்யமாக நகர்ந்து செல்கின்றன.

சாய்ராம் தனது குற்றச்செயலின் விஸ்வரூப சிக்கலில் இருந்து விடுபட்டாரா, இல்லையா? காயத்ரி தன் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு போனாரா, இல்லையா? தன் காதல் நிராகரிக்கப்பட்ட அபிராம் தற்கொலை செய்துகொண்டாரா, இல்லையா? சிறுமி மஹிதா அந்த ஏழைச் சிறுவனை கண்டுபிடித்தாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு விடை கொடுக்கும் க்ளைமாக்ஸ் சீக்வன்ஸ், பரபரப்பான ட்விஸ்டுகளுடன் விரிந்து, முடிவில் இன்ப அதிர்ச்சியுடன் “அட…” போட வைக்கிறது.

தெலுங்கு படவுலகில் புதுமைகள் செய்து, பாமர ரசிகர்களின் ஆதரவையும், விமர்சகர்களின் பாராட்டையும், விருதுகளின் அங்கீகாரத்தையும் பெற்ற இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி, கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். நேர்த்தியான திரைக்கதை உத்திகள், அவற்றை சேதாரமில்லாமல் சிறப்பாக திரைக்கு மாற்றும் சாமர்த்தியம் ஆகிய கலைகளில் கைதேர்ந்தவர் சந்திரசேகர் ஏலட்டி என்பதற்கு இப்படமே சாட்சி. பாராட்டுக்கள் சந்திரசேகர் ஏலட்டி.

சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேனேஜராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார். எனினும் அவர் பேசும் வசனங்களில் மலையாள வாடை அதிகம் இருப்பது ஒரு குறை.

ரொம்ப பொறுப்புள்ள, அதேநேரத்தில் ரொம்பவும் அப்பாவியான ஹவுஸ் ஒய்ஃபாக வரும் கௌதமி, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து பெண்ணாக நடித்திருந்தாலும், இவரது உடையில் மேல் தட்டு சாயல் இருப்பது நெருடல்.

கௌதமியின் தோழியாக வரும் ஊர்வசியின் குழந்தைத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. கல்லூரி மாணவராக வரும் விஷ்வாந்த், பள்ளிக்கூட மாணவியாக வரும் ரைனா உள்ளிட்ட அனைவரது நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் உதடுகளும், வசனங்களும் ஒட்டாமல், ‘நான் சிங்க்’ ஆக இருந்துகொண்டு, “இது டப்பிங் படம்” என்பதை பறைசாற்றிய வண்ணம் இருக்கின்றன. இதை தவிர்த்திருக்கலாம்.

‘நமது’ – குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்!