விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு!

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 40-வது நாளை எட்டியுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெறு வருகிறது.

வங்கிகடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளது. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இப்போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள் ,அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருவது வேதனை அளிக்கிறது.

அவர்களின்/ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும்.

அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் நாடு தழுவிய அடையாள போராட்டத்திற்கு நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு நடிகர் சங்கம் கூறியுள்ளது.