“100 எம்எல்ஏ.வை ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா நானும் சி.எம். தான்!” – ராணா பஞ்ச்!

இயக்குனர் தேஜா இயக்கத்தில், ராணா – காஜல் அகர்வால் நடிப்பில், ஆந்திராவில் வெளியாகி, வெற்றி வாகை சூடிய தெலுங்குப் படம் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’. இந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

ராணா, காஜல் அகர்வால் ஆகியோருடன் கேத்ரீன் தெரசா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு, எம்.ஜி.ஆரின் பிரபலமான பாடல் வரியான ‘ நான் ஆணையிட்டால்’ என்பதை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

படத்துக்கு எம்.ஜிஆரின் பாடல் வரியை தலைப்பாக வைத்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் தேஜா, ”நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில தான். அதற்குப்பிறகு ஹிந்தி படவுலகுக்குப் போய் விட்டேன். அங்கே இருக்கும்போது தான் எனக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்தது. என்ன தான் தெலுங்குப் படவுலகில் இருந்தாலும், என்னுடைய குரு எம்.ஜி.ஆர் தான். நான் அவருடைய தீவிர ரசிகன்.

“இன்றைக்கும் நான் எந்தவொரு தெலுங்குப் படத்தை இயக்கினாலும், ஏதாவது ஒரு காட்சியிலாவது பின்னணியில் எம்.ஜி.ஆர் படப் பாடலை ஒலிக்கவிட்டே ஆக வேண்டும் என்று இசையமைப்பாளரிடம் சொல்லி விடுவேன்.

“எம்.ஜி.ஆர். காட்டிய வழியில நடக்கும் நான், இன்றைக்கும் என்னுடைய நிஜ வாழ்க்கையில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறேன். இந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருப்பதால் தான் இந்த படத்துக்கு ‘நான் ஆணையிட்டால்’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரியை தலைப்பாக வைத்தேன்” என்றார்.

இது மட்டும் அல்ல, தற்போதைய தமிழக அரசியலை நினைவூட்டும் காட்சி அமைப்புகளையும் இப்படத்தில் வைத்திருக்கிறாராம் இயக்குனர் தேஜா.

கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் செய்து போர்க்கொடி தூக்கியதை அடுத்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அடைத்து வைக்கப்பட்டார்களே… அதை நினைவூட்டும் காட்சி இப்படத்தில் இருக்கிறதாம். நாயகன் ராணாவைப் பார்த்து, “நான் சி.எம். என்பதை மறந்துவிடாதே” என்று முதல்வர் கதாபாத்திரம் எச்சரிக்க, “100 எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் சி.எம் தாண்டா” என பதிலடி கொடுக்கிறாராம் ராணா.

“காட்சிகள் மட்டும் அல்லாமல், படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்களும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிப்பதாக இருக்கும்” என்றார் தேஜா.

n6