ரஜினியின் ‘காலா’ கதைக்களம் தாராவி: தமிழக சாதி கொடுமையின் அடையாளம்!

மும்பை தாராவி – தமிழ்நாட்டின் சாதிக்கொடுமையின் பன்னாட்டு அடையாளம்!

104 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட சாதிக்கொடுமை, அடக்குமுறை காரணமாக தாங்க முடியாத் துயரத்துடன் வீடு, வாசல், நிலம் என உடமைளை இழந்து வாழ்க்கையைத் தேடி
படகுகளைப் பிடித்தும், நடந்தும் மும்பை சென்றனர் பாதிக்கப்பட்ட பட்டியலினத்து மக்கள்.

நடந்து சென்றவர்கள் பலருக்கு மும்பையை அடைய மாதக்கணக்காகி இருக்கின்றன. மும்பையில் இருந்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை. வலுவில்லாத கூரையைக் கொண்ட குடிசைகள், சாக்குப் பைகளே சுவர்களாக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், தங்கள் உழைப்பின் பலனாகக் கிடைத்த காசுகளில், 25 பைசா, 50 பைசா என ஒவ்வொருவரும் பங்களிப்புத் தர 15,000 ரூபாய் வரை சேமித்து ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள்.

அதில் ஒரு விநாயகர் கோவிலை நிறுவி அதைச் சுற்றிலும் 80 குடும்பங்கள் குடிவைக்கப்பட்டன.

அன்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட அந்த ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

அந்த ஒரு ஏக்கர் நிலமே, தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தென் தமிழகத்துத் தமிழர்களால் பரந்து விரிந்து ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக நிற்கிறது தாராவி என்ற பெயரில்.

அது வெறும் குடிசைப்பகுதி மட்டுமல்ல, சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களைக் கொண்ட தொழில் பூங்காவும்கூட. ஆண்டொன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை உற்பத்தி செய்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதே பகுதியை மையமாக வைத்தே ராமநாதபுரத்தில் பிறந்த மஸ்தானும், தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார் என்கிற வர்தா பாயும் நிழலுலக தாதாக்களாக கோலோச்சினார்கள். வர்தா பாயின் வாழ்க்கைமுறையே, மணிரத்னம் இயக்கி கமல் நடித்த ‘நாயகன்’ படத்தின் கதை.

104 ஆண்டுகளைக் கடந்தும் அது குடிசைப்பகுதியாவே உள்ளது, ஆசியாவின் மாபெரும் குடிசைப்பகுதி என்ற பெருமையைச் சுமந்தபடி.

எனினும், அத்தனை சோதனைகளையும் கடந்து உழைப்பால் உயர்ந்து நிற்கின்றனர் தாராவித் தமிழர்கள்.

அதேசமயம் தாராவி, தமிழ்நாட்டின் சாதிக் கொடுமையின் அடையாளம், வலிகளின் சாட்சி என்பதை மறுக்க முடியாது.

விஷ்வா விஸ்வநாத் பதிவு