ஜல்லிக்கட்டு நடத்த சட்டப் பேரவையில் புதிய சட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

“புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இன்று தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்றைக்கு மத்திய- மாநில அரசுகளின் மெத்தனத்தைப் பார்த்து கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி தமிழகமெங்கும் தன்னெழுச்சியுடன் மாணவர்களும், மக்களும் நடத்தும் போராட்டத்தின் உணர்வுகளை மத்திய அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் கைவிரித்து விட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்த அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து நாளைக்கே சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தையும் கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையையும் பெறலாம்.

பிரதமர் நரேந்திரமோடி, ‘மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும் என்று முதல்வருடான சந்திப்பில் தெரிவித்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமரின் இந்த உறுதிமொழியை துணைக்கு வைத்துக்கொண்டு, ஏற்கெனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரபல சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, அந்த தீர்ப்பில் திமுக அரசின் ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டத்தில் ஏதேனும் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருப்பின் அதையும் நிவர்த்தி செய்து புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு’ ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Read previous post:
0
“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்!” – ஓ.பி.எஸ்.

“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்” என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Close