“ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி வளர்ச்சி நாட்டுக்கு நன்மையானது அல்ல!” – எம்.ஜி.ஆர்

டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார்.

“கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?”

“பதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில், முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்’’ என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள், படித்தவர்கள், யோசித்துச் செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்றுகொண்டு , தமிழ்நாட்டில் 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக “ஒழிக’’ என்று சொன்னார்கள்.

“அவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும்போது, இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது.

“நேரத்தையும் முன்னதாகக் குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

“அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்குப் பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

“இதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும்? இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல.

“இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா? என்பதையும் உணர வேண்டும்.

“இதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றிக் கேள்வி கேட்க வேண்டியதே இல்லை.

“இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம். எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது. “

(முழு கட்டுரை படிக்க)