விஷால், சூர்யா, கார்த்தி வரிசையில் இணைந்த ‘மெட்ரோ’ நாயகன் சிரிஷ்!

தமிழ் திரையுலக பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள் தான். என்றாலும், வறுமையில் வாடுவோர் “உதவி” என்று கேட்டால், இந்த பிரபலங்களில் பலருக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட மனம் வராது.

நடிகர்கள் விஷால், சூர்யா, கார்த்தி, நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா போன்ற ஒருசிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. உதவியை எதிர்பார்க்கும் சாமான்யர்களுக்கு ஓடோடி வந்து உதவும் தாராள மனம் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களது வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் ‘மெட்ரோ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் சிரிஷ்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 80 வயதைக் கடந்த அனைவருக்கும், ஒரு வருடத்துக்கான பென்ஷன் வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சிரிஷ். தன்னுடைய முதல் படமான ‘மெட்ரோ’வுக்கு வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக அவர் கொடுத்துள்ளார்.

இந்த ஐடியாவை அவரிடம் சொன்னதே நடிகர் சங்க செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் தானாம். “நல்ல ஐடியாவாக இருக்கிறதே…” என்று வியந்த சிரிஷ், உடனடியாக அதை செயல்படுத்தியும் இருக்கிறார்.

அத்துடன், அடுத்த இரண்டு வருடங்களுக்கான பென்ஷன் தொகையையும் தானே தருவதாக விஷாலிடமும், கார்த்தியிடமும் உறுதி அளித்திருக்கிறார் சிரிஷ்.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, உதவி செய்யும் சிரிஷின் நல்ல குணம் வெளிப்பட்டிருப்பது கண்டு தமிழ் திரையுலகினர் வியக்கிறார்கள்.