மரகத நாணயம் – விமர்சனம்

அது அபூர்வ சக்தி வாய்ந்த, ராசியான மரகத நாணயம். அதே நேரத்தில், அதை யார் தொட்டாலும் அவர் உயிரிழப்பது நிச்சயம் என்பதால், அது ஆபத்தான நாணயமும் கூட. அத்தகைய விபரீதமான நாணயத்தை எடுக்கச் செல்லும் இரு நண்பர்களின் கதை தான் ‘மரகத நாணயம்’.

கதை நாயகன் ஆதி ரூ.40 லட்சம் கடனாளி. கடனை அடைக்கத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்காக, நண்பன் டேனியேலின் அறிவுரையின் பேரில் அவர், கடத்தல் தொழில் செய்யும் ராமதாஸிடம் வேலைக்கு சேருகிறார். ஆனால், சிறு சிறு கடத்தல்கள் மூலம் இந்த ஜென்மத்தில் கடனை அடைக்க முடியாது என்பதை ஆதி உணருகிறபோது, அபூர்வமான மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்தால் ரூ.10 கோடி சன்மானம் தருவதாக ஆசை காட்டுகிறார் ஒரு சீனாக்காரர். அந்த மரகத நாணயத்தை தொட்ட 132 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள் என தெரிந்தும், ஆதியும், அவரது நண்பன் டேனியலும் அதை எடுத்துவர சம்மதித்து, துணிச்சலுடன் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களுக்கு சில ஆவிகளும் உதவ முன்வருகின்றன. அவர்கள் மரகத நாணயத்தை எடுத்து வந்தார்களா? இறந்து போனார்களா? என்பது தான் இப்படத்தின் கதை.

காதல் இல்லாமல், கவர்ச்சி இல்லாமல், சண்டை இல்லாமல், அருவருக்கத்தக்க பயங்கர தோற்றம் கொண்ட உருவங்கள் இல்லாமல், காட்சிக்குக் காட்சி காமெடியைத் தூவி, வித்தியாசமான, ஜனரஞ்சகமான, சுவாரஸ்யமான பேய் படம் எடுத்து சாதித்துக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஏஆர்கே.சரவன். இப்படத்தின் பலமே இதன் திரைக்கதை தான். எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் கவனமாக செதுக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்து, அவற்றுக்கு பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, படம் நெடுகிலும் சிறு சிறு ஸ்பாட் காமெடிகளை விரவி, வெற்றிப்பட இயக்குனராய் உயர்ந்திருக்கிறார் சரவன்.

நாயகன் ஆதி தனக்கேற்ற கதையை தேர்வு செய்து, அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தில் அவர் வரும் எல்லா காட்சிகளிலும் அவரது நடிப்பு பாராட்டும்படியாக, ரசிக்கும்படியாக இருக்கிறது.

நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான, சவாலான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ஆண் ரவுடியின் உடல்மொழியை அட்டகாசமாக வெளிப்படுத்தி தூள் பரத்தியிருக்கிறார்.

படத்திற்கு கூடுதல் பலமும், சுவாரஸ்யமும் சேர்ப்பது, சிறு சிறு கடத்தல்கள் செய்யும் கதாபாத்திரத்தில் வரும் ராமதாஸ் கொளுத்திப் போடும் காமெடி அட்ராசிட்டி தான். இவரது வசனங்களுக்கு திரையரங்கே வெடித்துச் சிரிக்கிறது.

ஆதியின் நண்பனாக வரும் டேனியேல், ரவுடிகளின் தலைவனாக வரும் ‘ஹைடெக் வில்லன்’ ஆனந்த்ராஜ், அவரது கைத்தடியாக வரும் முருகானந்தம், ஆவியாக வரும் சங்கிலி முருகன், சாமியாராக வரும் கோட்டா சீனிவாசராவ், தொல்லியல் துறை அதிகாரியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்து படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க வண்ண மயமாக இருக்கிறது.

திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பின்னணி இசையில் மனுசன் பின்னி எடுத்திருக்கிறார்.

பிரசன்னாவின் படத்தொகுப்பு, காட்சிகளை கோர்வையாக அமைத்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது.

‘மரகத நாணயம்’ – குடும்பத்துடன் போய் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம்!