உதயநிதியின் ‘மனிதன்’ – முன்னோட்டம்!

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘மனிதன்’ திரைப்படம் வருகிற 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த வெற்றிப்படத்தின் தலைப்பு ‘மனிதன்’. இந்த தலைப்பை அப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி சூட்டியிருக்கிறார்கள்.
‘கெத்து’ படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் இந்த ‘மனிதன்’ திரைப்படத்தை, ‘என்றென்றும் புன்னகை’ வெற்றிப்படத்தை இயக்கிய ஐ.அஹமத் இயக்கியுள்ள்ளார்.
உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வரும் ஒரு சாதாரண வக்கீல், நீதியை நிலை நாட்டுவதற்காக ஒரு பெரிய வக்கீலுக்கு எதிராக நடத்தும் போராட்டமே ‘மனிதன்’ படத்தின் கதைக்கரு. இதில் சாதாரண வக்கீலாக நாயகன் உதயநிதியும், பெரிய வக்கீலாக பிரகாஷ்ராஜூம் நடித்திருக்கிறார்கள்.
காதல் கலந்த நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவந்த உதயநிதிக்கு, வக்கீல் வேடம் உண்மையிலேயே வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால், “இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் உதயநிதி.
”என் முதல் படத்தில் எனக்கு டான்ஸ் ஆட சுத்தமாவே தெரியாது. இரண்டாவது படத்தில் அதை சரி பண்ணினேன். அதே மாதிரி இரண்டாவது படத்தில் சண்டைக்காட்சி ரொம்ப வீக்காக இருந்தது. என் மூன்றாவது படத்தில் அதை சரி செய்து கொண்டேன். இப்போது ‘மனிதன்’ படத்தில் எனக்கு புது எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்திருக்கிறது. அதாவது, இந்த படத்தில், கோர்ட் சீன்களில், நீளமான வசனங்களை தடுமாறாமல் பேசியிருக்கிறேன். நான் தேறிவிட்டேன் என்று, படம் பார்த்தபின் நீங்களே சொல்லுவீர்கள்” என்கிறார் உதயநிதி.
இப்படம் குறித்து இயக்குனர் ஐ.அஹமத் கூறுகையில், “உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது ‘மனிதன்’ திரைப்படம். படத்தின் பாதி நீதிமன்ற காட்சிகள் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
“நீதிமன்ற வளாகத்தையும், சென்னை மண்ணடி தெருவையும் பிரதிபலிக்கும் விதமாக பிரமாண்டமான முறையில் அரங்கங்கள் அமைத்து, அவற்றில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர் – நடிகைகளையும் கையாள்வது பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும், திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார்.
பொள்ளாச்சி, காரைக்குடி, சாலக்குடி, சென்னை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் இயக்குனர் ஐ.அஹமத்துடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை மதியும், படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜியும் மேற்கொண்டிருக்கிறார்கள்.
‘மனிதன்’ வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
@ @ @