கோவை சரளா அடிக்கடி பேசும் வசனம் தான் “பலே வெள்ளையத்தேவா”!

தமிழர் வாழும் நிலங்களெங்கும் பிரசித்தி பெற்று விளங்கும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜி கணேசன் பேசிய பிரபலமான வசனம் – “பலே வெள்ளையத்தேவா…!” இந்த வசனத்தையே தலைப்பாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய படம் இந்த (டிசம்பர்) மாதம் 23ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

எம்.சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்த ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ்  இயக்கியிருக்கிறார்.

சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தை வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

‘பலே வெள்ளையத்தேவா’ படம் குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமார் கூறுகையில், “குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள முழுநீள காமெடி படம் தான் ‘பலே வெள்ளையத்தேவா’. இதில் ஒரு கிராமத்து போஸ்ட் மாஸ்டரின் மகனாக நான் நடித்திருக்கிறேன். எனக்கு அம்மாவாக ரோகிணி நடித்திருக்கிறார்.

‘செல்ஃபி காத்தாயி’ என்ற கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். முன்பெல்லாம் ஒரு பிரபலத்தை பார்த்தால், ஆட்டோகிராப் வாங்குவார்கள். இப்போது யாரும் ஆட்டோகிராப் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த செல்ஃபி கலாசாரம் இன்று கிராம்ங்களிலும் பரவியிருக்கிறது. அதை பிரதிபலிக்கும் வகையிலான ‘செல்ஃபி காத்தாயி’ கதாபாத்திரத்தில் கோவை சரளா கலக்கியிருக்கிறார்.

“சபாஷ்… சரியான போட்டி…” என்று சாதாரண பேச்சு வழக்கில் அடிக்கடி சொல்லப்படுவது போல, ‘பலே வெள்ளையத்தேவா” என்பதும் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் சர்வ சாதாரணமாக புழங்கி வருவது தான். இதை படத்தில் கோவை சரளா அடிக்கடி சொல்லுவார். எனவே அவர் சொல்லுகிற இந்த “பலே வெள்ளையத்தேவா” வசனத்தையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறோம். மற்றபடி இது ஒன்றும் தேவர் சாதி படம் இல்லை.

படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படம் போல் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் கோவை சரளா எனக்கு பாட்டியும் கிடையாது. அவருக்கு நான் பேரனும் கிடையாது.

சங்கிலி முருகன், கோவை சரளாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் கோவை சரளா ராப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டதும், அந்த பாட்டி கதாபாத்திரத்திற்கு மனோரமா ஆச்சிதான் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்குள் தோன்றியது. ஆனால், இப்போது ஆச்சி நம்முடன் இல்லை என்பதால், அதற்கடுத்தபடியாக சேச்சி கோவை சரளாதான் இதற்கு சரியாக பொருந்துவார் என்று அவரை அணுகினோம். அவரும் உடனே ஒத்துக்கொண்டார்.

படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைவிட கோவை சரளாவின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும். தான்யா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கக்கூடிய காமெடி படமாக ‘பலே வெள்ளையத்தேவா’ நிச்சயம் இருக்கும் என்பது உறுதி” என்றார் எம்.சசிகுமார்.