இடதுசாரிகளுடனான ஐக்கியம் தொடர விடுதலை சிறுத்தைகள் விருப்பம்!

கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த ஐக்கியம் தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் கூறியிருப்பது:

இடதுசாரிக் கட்சிகளோடு இணைந்து செயல்படவேண்டுமென கடந்த பத்து ஆண்டுகளாக விசிக மேற்கொண்ட முயற்சி இப்போதுதான் ஈடேறியிருக்கிறது.

தோழர் டி.கே.ஆர் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு விசிக இரண்டு வாக்குகளை அளித்தது. ஒரு கூட்டியக்கத்தை உருவாக்குவதற்கென தோழர்கள் என்.வி, தா.பா, ஆர்.என்.கே ஆகியோரை தலைவரும் நானும் பலமுறை சந்தித்துப் பேசினோம்.

சிபிஐஎம் தலைவர்களும் நாங்களுமாக மக்கள் பிரச்சனைகளுக்காக இணைந்து போராடுவதென 2009ல் முடிவு செய்தோம். முன்னெடுக்க வேண்டிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு போராட்டத் திட்டத்தையும் தயாரித்தோம். அப்போது வந்த மக்களவைத் தேர்தலின் காரணமாக அது செயல்வடிவம் பெறாமல் போய்விட்டது.

2011லும், அதற்குப்பின் வந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும் மீண்டும் இடதுசாரிகளோடு இணைந்து நிற்க முயன்றோம். தர்மபுரி வன்முறையைத் தொடர்ந்து அவர்களோடு இணைந்து போராட்டக் களங்களை அமைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக 2014ல் இதே போன்று அவர்களோடு ஒரு அணி அமைக்க முயற்சித்தோம்.

அந்த முயற்சிகளெல்லாம் 2015ல் தான் பலன் தரத் துவங்கின. மக்கள் நலக் கூட்டியக்கம் உருவானது.

மக்கள் நலக் கூட்டியக்கம் துவக்கப்பட்டு இந்த பத்து மாதங்களில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களோடான தோழமை வலுப்பட்டிருக்கிறது. விசிக குறித்து அவர்களுக்கிருந்த தயக்கங்கள் முற்றாக உடைந்துவிட்டன.

பெயர்கள் வேறாக இருந்தாலும் விசிகவும், இடதுசாரிகளும் ஒரே வர்க்கச் சார்பு கொண்ட கட்சிகள்தாம். இந்த ஐக்கியம் தொடர வேண்டும்.

இவ்வாறு ரவிகுமார் கூறியுள்ளார்.