கிடா பூசாரி மகுடி – விமர்சனம்

நாயகன் தமிழ் (மகுடி) கிராமத்தில் அய்யனார் சாமிக்கு கிடா வெட்டுபவராக இருந்து வருகிறார். இவர் சிறுவனாக இருக்கும்போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக குழந்தை பிறக்காமல் இருந்த அக்காவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு மலர் (நட்சத்திரா) என்று பெயர் வைத்து தன்னுடைய உயிராய் நினைத்து வளர்த்து வருகிறார் தமிழ்.

சிறுவயதில் இருந்தே நட்சத்திராவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையுடனே தமிழ் வளர்ந்திருக்கிறார். ஆனால் நட்சத்திராவோ சென்னையில் இருந்து வந்த ராம்தேவ் என்பவரை காதலிக்கிறார். ராம்தேவ்வும் நட்சத்திராவின் காதலை ஏற்று, ஆங்காங்கே பார்த்து பேசி வருகிறார்கள்.

இவர்கள் காதலிப்பது ஊர் மக்கள் மூலமாக தமிழ் காதுக்கு செல்கிறது. கோபமடைந்த தமிழ், நேராக வீட்டுக்குப்போய், நட்சத்திராவை அய்யனார் கோவிலுக்கு இழுத்துச் சென்று, கட்டாயத் தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். முதலில் தமிழை கணவனாக ஏற்க மறுக்கும் நட்சத்திரா, பின்பு அவரின் அன்பை உணர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டு இருவரும் சந்தோஷமாய் வாழ்கிறார்கள்.

இந்நிலையில், காதல் தோல்வியால் சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வருகிறார் ராம்தேவ். இவரை பார்த்தவுடனே தமிழ்-நட்சத்திரா குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைகள் தீர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக தமிழ் நடித்து இவரே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் பாதியில் நட்சத்திரா மீது பாசமுள்ள மாமாவாகவும், இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியான நட்சத்திராவிற்கு இதுதான் முதல் படம். இவர் காதலியாகவும், மனைவியாகவும், அம்மாவாகவும் தன்னுடைய நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக மொட்டை அடித்து, நம்மை கண் கலங்க வைத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக வரும் ராம்தேவ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், செவ்வாழை ராசு, சுப்புராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’  பட பாணியில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார். குறைந்த பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் இளையராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசையையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

ரவி சீனிவாசின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

‘கிடா பூசாரி மகுடி’ – இனிமை