தேவா, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கி ஆம்பூரில் பதுங்கியிருந்த தனியார் அமைப்பின் நிர்வாகியை சென்னை தனிப்படை காவல் துறையினர் இன்று (5-ம் தேதி) கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ‘சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியார் அமைப்பு கடந்த மாதம் 26-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிப்பதாகக் கூறி விருதுகளும், சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் வடிவேலு, இசைமைப்பாளர் தேவா, பேச்சாளர் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கியது.

இதில், ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். ஓய்வுப்பெற்ற நீதிபதியை கொண்டு தனியார் அமைப்பு ஒன்று அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழாவும், சினிமா பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தனியார் அமைப்புக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில், தனியார் அமைப்பின் இயக்குநரான சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜூ ஹரிஷ் மீது கோட்டூர் காவல் துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையறிந்த ராஜூ ஹரிஷ் தலைமறைவானார். மேலும், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவான ராஜூ ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கருப்பையா, ராஜா ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ராஜூ ஹரிஷ் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை காவல் துறையினர் நேற்றிரவு ஆம்பூருக்கு வந்தனர். ஆம்பூரை அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த ராஜூ ஹரிஷை தனிப்படை காவல் துறையினர் நேற்று நள்ளிரவு கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், ராஜூ ஹரிஷ் கூட்டாளிகளான கருப்பையா என்பவரையும், சான்றோர்குப்பம் நடேசன் பள்ளி தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரையும் சென்னை தனிப்படை காவல் துறையினர் இன்று காலை கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, ராஜூ ஹரிஷ் நண்பர்கள் தான் அவரை ஆம்பூருக்கு வரவழைத்து ஆம்பூரில் தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் ஆம்பூர் காவல் துறையினருடன் இணைந்து ராஜூ ஹரிஷ் நண்பர்கள் குறித்த பட்டியல் தயார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.