தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கூறும் கீழடி அருங்காட்சியகம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.கஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர், ஒருமணி நேரத்துக்கும் மேலாக தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 காட்சிக் கூடங்களில், பழங்கால மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகை கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள், பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ள தொல்பொருட்கள், இரும்பு, நெசவு, கைவினைத்தொழில்கள், கடல் வணிகம் செய்ததற்கான தொல்பொருள் சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

15 நிமிட ஒலி-ஒளி காட்சியகம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி, 2 நிமிட அனிமேஷன் வீடியோ காட்சி ஆகியவையும் இந்த கூடங்களில் இடம்பெற்றுள்ளன.

கீழடி அருங்காட்சியகத் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நினைவுப் பரிசு வழங்கினார். அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசுகளை சுற்றுலா துறை செயலர் சந்திரமோகன் வழங்கினார். மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மற்றும்அகழாய்வுக்கு நிலம் வழங்கியவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், எ.வ.வேலு, சக்கரபாணி, ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன், தலைமைச் செயலர் இறையன்பு, முதல்வரின் தனிச் செயலர் உதயச்சந்திரன், சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏக்கள் தமிழரசி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாங்குடி, கோ.தளபதி, தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.