அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிய பினராயி விஜயனுக்கு ‘கேரள பெரியார்’ விருது!

பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சராக்கி, வழிபாட்டுத் தலங்களில் சமத்துவத்தை உறுதிப்படுத்தியது, நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக போராடும் அமைப்புக்களும், பார்ப்பனர் அல்லாத மக்களும் பினராயி விஜயனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

இதனையடுத்து, ‘தமிழ்ப்புலிகள்’ அமைப்பினர் திருவனந்தபுரத்திலுள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து, அவருக்கு ‘கேரள பெரியார்’ என்ற விருதை வழங்கினர்.

தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை. திருவள்ளுவன், பினராயி விஜயனிடம் விருதை வழங்கினார். அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சி.பேரறிவாளன், இளவேனில், நிதிச்செயலாளர் சித்தார்த்தன், செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.