காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் மூத்த மடாதிபதி ஜெயேந்திரர் இன்று (பிப்ரவரி 28) காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

கடந்த பல வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர், அதற்கான சிகிச்சைகள் எடுத்து வந்தார். கடந்த மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில்,  அவருக்கு இன்று (28ஆம் தேதி) அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடத்துக்கு அருகில் உள்ள, சங்கர மடத்துக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

முதுமை காரணமாகவும், நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாகவும் ஜெயேந்திரர் மரணம் அடைந்ததாக, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஜெயேந்திரரின் உடல், மருத்துவமனையில் இருந்து சங்கர மடத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சங்கர மட பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் அவரது உடல் சங்கர மடத்துக்கு உள்ளேயே அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.