கடுகு – விமர்சனம்

அத்துமீறிப் பிரவேசம் செய்யும் அமைச்சர் ஒருவரின் தவறான நடவடிக்கையும், அதற்கான விளைவுகளுமே ‘கடுகு’.

புலி வேடம் போடும் கலைஞன் ராஜகுமாரன். அந்தக் கலை மெல்ல மெல்ல அழியும் தருவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உதவியாளராக சேர்கிறார். புதிதாய் வந்த ஊரில் ராஜகுமாரனுக்கு இரு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்காக புலி வேடம் போடும் ராஜகுமாரன், அங்கே நடந்த சம்பவத்துக்காக கலங்குறார், கண்ணீர் வடிக்கிறார், பாடம் புகட்டப் புறப்படுகிறார். நடந்தது என்ன? என்பது மீதிக் கதை.

‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ படங்களுக்குப் பிறகு நான் மறுபடியும் திரும்பி, விரும்பி வந்துவிட்டேன் என்று ‘கடுகு’ மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான பலம் நடிகர்கள் தேர்வு. ராஜகுமாரன் படத்தின் வலிமையான கதாபாத்திரம். வசனம் பேசுவதிலும், உச்சரிப்பிலும் கொஞ்சம் நிதானமும், தயக்கமும் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதுவே ராஜகுமாரனின் வெகுளித்தனமான கதாபாத்திரத்துக்கான இயல்பான மொழியாகிவிடுகிறது. விளம்பரமில்லா உதவும் குணம், பிறரின் துன்பம் துடைக்க கரம் நீள்வது, அன்பைப் பகிர்வது, தவறு கண்டு பொங்குவது என ஒரு அமைதியான ராஜகுமாரன் ஆக்ரோஷமாக மாறி புலிப் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார். செயற்கைத் தனம் ஆங்காங்கே தென்பட்டாலும் அதை பொருட்படுத்தாத அளவுக்கு சில தருணங்களில் மனதைக் கரைக்கிறார்.

நல்லவன் பாதி, கெட்டவன் பாதி கலந்து செய்த கலவையா? என்று இனம் பிரித்தறிய முடியா ஒரு கதாபாத்திரம் பரத்துக்கு. சிக்கலான அந்தக் கதாபாத்திரத்தை பரத் மிகச் சரியாக கையாள்கிறார்.

ராதிகா ப்ரஷித்தா தன் ஃபிளாஷ்பேக் சொல்லும்போதும், சிறுமியைக் காப்பாற்றும் போதும் மனதில் நிற்கிறார்.

பாரதி சீனு கதாபாத்திரம் கலகலப்பாக நகர்ந்து கவனிக்கும் விதத்தில் அமைவது சிறப்பு. காதல் தூது விட்டு, பின் நடந்த உண்மையை விளக்கும் விதம் ரசனை. பரத் பாட்டியாக வரும் மங்கையர்க்கரசி, சிறுமி ஷக்தி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அமைச்சராக வரும் வெங்கட் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

அருணகிரியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. அனூப் சீலின் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். விஜய் மில்டனின் ஒளிப்பதிவு மற்றும் வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

”உன்னை மாட்டி விடுறதை விட மாத்தி விடணும்னுதான் நினைக்கிறேன்”, ”இந்த உலகத்துல கெட்டவங்களை விடவும் ரொம்ப மோசமானவங்க யாருன்னா, ஒரு தப்பு நடக்கும்போது அதைத் தட்டிக்கேட்காத நல்லவங்கதான்”, ”கலை அழியும்போது கலைஞனும் கூடவே செத்துப்போயிடணும்”, ”வெளியே தெரியாதுங்கிறதுக்காக என்னால தப்பு பண்ண முடியாது”, ”நாலு பேருக்கு நாம என்னவா தெரியுறோம்ங்கிறது முக்கியம் இல்லை, நாம கண்ணாடியில பார்க்குறபோது நமக்கு என்னவா தெரியுறோம்ங்கிறதுதான் முக்கியம்” போன்ற கூர்மையான, நுட்பமான வசனங்கள் படத்துக்கு வலிமை கூட்டுகின்றன.

கதையின் மையத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை, பாடல்கள் என கலந்துகட்டி சினிமா பண்ண நினைக்காமல் நேர்மையாக, சீரான திரைக்கதை அமைத்து நல்ல சினிமாவுக்கான நம்பிக்கையை விதைத்தற்காக இயக்குநர் விஜய் மில்டனுக்கு வாழ்த்துகள். புலி வேட நடனம், குழந்தைகள் நிகழ்ச்சி, நெகிழ வைக்கும் ராதிகாவின் கதை என களத்தை சரியாகப் பயன்படுத்தி உணர்வுகளைப் பேச விடும் சில காட்சிகளில் இயக்குநர் தனித்து நிற்கிறார்.

பரத்தின் சுயநலம், வளர்ச்சிக்காகத்தான் அப்படி நடந்துகொண்டாரா? என்பதில் சற்று தெளிவை ஏற்படுத்தி இருந்தால் திரைக்கதை இன்னும் கச்சிதமாக அமைந்திருக்கும். காதல் வளர எது காரணம் என்று புரிந்துகொண்ட சுபிக்‌ஷா மீண்டும் பரத்தை விரும்புவது உறுத்தல்.

செயற்கைத் தனம், மிகைத் தன்மை உள்ளிட்ட சில குறைகள் இருந்தாலும் மரபுக் கலையின் அழிவு குறித்த கலைஞனின் கவலையையும், தப்பை தட்டிக் கேட்க தயங்கக் கூடாது என்ற உணர்வை விதைத்த விதத்திலும் ‘கடுகு’ அக்கறையுள்ள சினிமா.